பெங்களூரு கலக்கல் வெற்றி சரிந்தது கோல்கட்டா அணி

தினமலர்  தினமலர்
பெங்களூரு கலக்கல் வெற்றி சரிந்தது கோல்கட்டா அணி

அபுதாபி:கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன், பேட்டிங் தேர்வு செய்தார்.


சிராஜ் அபாரம்கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில், திரிபாதி ஜோடி துவக்கம் கொடுத்தது. பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், நவ்தீப் சைனி 'வேகத்தில்' மிரட்டினர். சிராஜ் வீசிய போட்டியின் 2வது ஓவரில் திரிபாதி (1), ராணா (0) அவுட்டாகினர்.

சுப்மன் கில்லை (1), சைனி போல்டாக்கினார். மீண்டும் வந்த சிராஜ், இம்முறை பான்டனை (10) வெளியேற்றினார். கோல்கட்டா அணி 14 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் சரிவில் இருந்து கடைசி வரை மீளவே முடியவில்லை.
தினேஷ் கார்த்திக் (4), கம்மின்ஸ் (4) நீடிக்கவில்லை. மார்கன் 30 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். கடைசி பந்தில் குல்தீப் (12) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 84 ரன் மட்டும் எடுத்தது. பெங்களூரு சார்பில் சிராஜ் 3, சகால் 2 விக்கெட் சாய்த்தனர்.


எளிய வெற்றிஎட்டிவிடும் இலக்கைத் துரத்திய பெங்களூரு அணிக்கு பின்ச் (16), தேவ்தத் படிக்கல் (25) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அடுத்து இணைந்த கோஹ்லி, குர்கீரத் ஜோடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது.பெங்களூரு அணி 13.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கோஹ்லி (18), குர்கீரத் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை