சீன வங்கியில் கணக்கு வைத்துள்ள டிரம்ப்; பகிரங்கப்படுத்திய பத்திரிகை

தினமலர்  தினமலர்
சீன வங்கியில் கணக்கு வைத்துள்ள டிரம்ப்; பகிரங்கப்படுத்திய பத்திரிகை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் சீன வங்கியில் கணக்கு வைத்திருப்பதாகவும், 2013 முதல் 2015 வரை உள்ளூர் வரிகளை கட்டியிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னும் இரு வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் முன்னிலையில் உள்ளார். தேர்தல் பிரசாரங்களில் கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார விஷயங்களுக்காக சீனாவை டிரம்ப் கடுமையாக சாடினார். அந்நாட்டில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என வர்த்தக போரை தூண்டினார். இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை டிரம்பின் வரி கணக்கை வெளியிட்டுள்ளது. அதில் தனிப்பட்ட மற்றும் அவரது நிறுவனத்தின் நிதி விவரங்கள் அடங்கியுள்ளன.


டிரம்ப் நிறுவனத்தின் சீன வங்கி கணக்கிலிருந்து 1.3 கோடி ரூபாய் உள்ளூர் வரியாக செலுத்தப்பட்டுள்ளதை பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக டிரம்ப் நிர்வாகம் பிடனின் மகன் ஹன்டருக்கு சீனாவுடன் வர்த்தக தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்கான ஆதாரம் எதையும் முன் வைக்கவில்லை. இந்த நிலையில் டிரம்ப் நிறுவனமே சீனாவில் வியாபாரம் செய்து உள்ளூர் வரியாக கோடிக் கணக்கில் செலுத்தி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து டிரம்ப் நிறுவன வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கத்தில், “நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஊகத்தின் அடிப்படையில் கதை எழுதியுள்ளது. அமெரிக்க அலுவலங்களுக்காக உள்ளூர் வரி கட்ட மட்டுமே சீன வங்கி கணக்கு துவங்கப்பட்டது. 2015-ல் இருந்து எந்த வணிக செயல்பாடுகளும், ஒப்பந்தங்களும் நடைபெறவில்லை. வங்கி கணக்கு செயலில் இருந்தாலும் வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை.” என கூறியுள்ளார்.

மூலக்கதை