பஞ்சாப் 'ஹாட்ரிக்' வெற்றி; ஷிகர் தவான் சதம் வீண்

தினமலர்  தினமலர்
பஞ்சாப் ஹாட்ரிக் வெற்றி; ஷிகர் தவான் சதம் வீண்

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நேற்று டில்லியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.

தவான் கலக்கல்


டில்லி அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா (7) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஸ்ரேயாஸ் (14), ரிஷாப் பன்ட் (14), ஸ்டாய்னிஸ் (9) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த தவான், 57வது பந்தில் சதம் கடந்தார்.தவிர, ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்த முதல் வீரர் என புதிய சாதனை படைத்தார். கடைசி பந்தில் ஹெட்மயர் (10) போல்டானார்.டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. தவான் (106 ரன், 3 சிக்சர், 12 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

பூரன் அபாரம்


பஞ்சாப் அணிக்கு கேப்டன் ராகுல் (15), மயங்க் அகர்வால் (5) ஜோடி அதிர்ச்சி தந்தது. கெய்ல் 13 பந்தில் 29 ரன் எடுத்து உதவினார். பூரன் (28 பந்து, 53 ரன்), மேக்ஸ்வெல் (32) கைகொடுத்தனர். இருப்பினும் அணியின் ரன்வேகம் அதிகமாக இருந்ததால், பஞ்சாப் வெற்றி எளிதானது. கடைசியில் நீஷம் ஒரு சிக்சர் அடிக்க, பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 'ஹாட்ரிக்' (பெங்களூரு, மும்பை, டில்லி) வெற்றி பெற்றது. நீஷம் (10), ஹூடா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை