சாறு இல்லாத சக்கை சிஎஸ்கே...பயிற்சியாளர் பிளெமிங் வேதனை

தினகரன்  தினகரன்
சாறு இல்லாத சக்கை சிஎஸ்கே...பயிற்சியாளர் பிளெமிங் வேதனை

அபுதாபி: ‘உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சென்னை அணி சாறு இல்லாத சக்கையாகவே உள்ளது’ என்று அதன் பயிற்சியாளர் ஸ்டீபன்  பிளெமிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் எப்போதும் கவனிக்கத்தக்க அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ்.  அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனி சென்னை அணிக்கும் கேப்டன் என்பதால் இந்த ஈர்ப்பு  முதல் சீசனில் இருந்து தொடர்கிறது.    இதுவரை நடந்த 12 ஐபிஎல்  சீசன்களில்  2016, 2017ம் ஆண்டுகளில் மட்டும் சூதாட்ட புகார் காரணமாக சென்னை  விளையாட வில்லை. அதே  நேரத்தில் விளையாடிய 10 சீசன்களிலும் தோனி தலைமையிலான சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.ஆனால் இந்த 13வது சீசனில் சென்னை  அணி ஆரம்பம் முதலே தள்ளாட்டத்தில்தான் இருக்கிறது. இதுவரை 10ஆட்டங்களில் விளையாடி உள்ள  சென்னை, 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி எஞ்சிய 4 போட்டிகளிலும்  வெற்றி பெற்றாலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அமையும். கூடவே  அதிக விக்கெட், ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் எஞ்சிய போட்டிகளில் சென்னை  வெல்வதற்கான வாய்ப்பு அரிதுதான். அது நேற்று முன்தினம் ராஜஸ்தானுடன் நடந்த போட்டியின்போது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்தப் போட்டி குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர்  பிளெமிங் தெரிவித்த கருத்தும் அதையே எதிரொலிக்கிறது. இது குறித்து கூறுகையில், ‘கடைசி 3 ஆண்டு நிலவரங்களை பார்த்தால், 2018ல் சாம்பியன்  பட்டம் வென்றோம். அடுத்து 2019ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கடைசி பந்தில் வாய்ப்பை இழந்தோம். தற்போதைய சீசனில் மிக வயதான  அணியை வைத்துக்கொண்டு முன்னேறுவது கடினம்.  கூடவே  அபுதாபி களம் புதிய தேவைகளுடன் சவால் விடுகிறது.இன்றைய சூழலில் சென்னை  அணி  சாறு இல்லாத சக்கையாக இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எங்களுக்கு சாதகமான சூழல் இல்லை. அதே  நேரத்தில் எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் இதே அணியையும், மற்ற அணிகளின் ஆட்ட முடிவுகளையும்   நம்பி  இருக்கும்போது  உற்சாகமாக, நேர்மறையாக செயல்படுவது கடினம்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை