துர்கை வடிவத்தில் கமலா ஹாரிஸ்: ஹிந்து அமைப்பினர் கண்டனம்

தினமலர்  தினமலர்
துர்கை வடிவத்தில் கமலா ஹாரிஸ்: ஹிந்து அமைப்பினர் கண்டனம்

வாஷிங்டன்,:அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசை, துர்கை வடிவத்தில் சமூக வலைதளத்தில், அவரது மருமகள் வெளியிட்டார். இதற்கு, அங்குள்ள ஹிந்து அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடைபெற உள்ளது. துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இவரது மருமகள் மீனா ஹாரிஸ், 35. வழக்கறிஞரான இவர், குழந்தைகளுக்கான
புத்தகங்களையும் எழுதி வருகிறார். மீனா தரப்பில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப், மஹிஷாசுரனாகவும், அவரை வதம் செய்யும் துர்கையாக, கமலா ஹாரிசும் சித்தரிக்கப்பட்டு இருந்தனர்.

துர்கை வடிவில் கமலா அமர்ந்திருக்கும் சிங்கமாக, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இருந்தார்.இந்த பதிவுக்கு அமெரிக்காவில் உள்ள ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், 'மீனா மன்னிப்பு கோர வேண்டும்' என, கூறினர். இதற்கிடையே, அந்த பதிவு நீக்கப்பட்டது.

இதுகுறித்து மீனா ஹாரிஸ் கூறுகையில், ''நான் தற்போது, பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். நவராத்திரியின் முதல் நாள், எனக்கு வேதனை அளிப்பதாக மாறியுள்ளது,'' என்றார்.

மூலக்கதை