ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை பண்டிகை காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை பண்டிகை காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: ‘‘தேசிய ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு இன்னும் ஓயவில்லை. எனவே வரும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றும் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உயைாற்ற இருப்பதாக டிவிட்டரில் அவர் நேற்று மதியம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக  நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது. சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில், இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மூலக்கதை