கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்களுக்கு இடையே பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஒரு மக்களவை தொகுதி மற்றும் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தேர்தல் ஆணையமானது கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல் நடப்பதால் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை 10 சதவீதம் உயர்த்தவேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் வேட்பாளர்களின் செலவு தொகையை அதிகரித்து மத்திய அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகையானது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு தொகை வரம்பு ரூ.70 லட்சமாக இருந்த நிலையில் தற்போது இது ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்களில் ரூ.28 லட்சமானது ரூ.30.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்ட இந்த அரசாணையில், கொரோனா தொற்றுநோயை கருத்தில் கொண்டு செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நடக்கும் தேர்தல்களுக்கு மட்டுமே இது பொருந்துமா என்பது குறித்தும் எதுவும் விளக்கப்படவில்லை. மேலும், இந்த திருத்தம் மத்திய அரசால் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. * புதிய அறிவிப்பின்படி, தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.77 லட்சமாகவும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் செலவு வரம்பு ரூ.30.8 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.* கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வேட்பாளர் தேர்தல்செலவு வரம்பு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை