பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருமகன் கைது : ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருமகன் கைது : ஓட்டல் அறைக்கதவை உடைத்து போலீஸ் நடவடிக்கை

கராச்சி, :பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகனை போலீசார் கைது செய்ததால், திடீர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணி பிரதமர் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக  கராச்சி நகரில் பிரம்மாண்ட பேரணி நடத்தின. இதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றார். இவர், இம்ரான் கானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் பேசும்போது, ‘பாகிஸ்தானில் மீண்டும் நவாஸ் ஷெரீபை பிரதமர் ஆக்குவோம். இம்ரான் கானை ஜெயிலுக்கு அனுப்புவோம்’ என்று பேசினார். இந்நிலையில் மரியம் நவாசின் கணவர் சப்தார் அவானை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, மரியம் மற்றும் அவரது கணவர் இருவரும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தபோது போலீசார் சப்தாரை கைது செய்தனர். இதுதொடர்பாக மரியம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அறைக் கதவை உடைத்து போலீசார் என் கணவரை கைது செய்தனர்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கைது சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை