ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் மையம் கொண்டது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால், அந்த பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.பல ஆறுகள் நிரம்பி கரைகள் உடைந்ததால், நகரத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மழையால் வீடுகளை இழந்துள்ளவர்கள் பராமரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

மூலக்கதை