பாகிஸ்தானில் கருப்பு பட்டியலில் இருந்த 5,000 தீவிரவாதிகளின் பெயர்கள் திடீர் நீக்கம் : எப்ஏடிஎப் கூட்டத்தில் பேசப்படும் என்பதால் தடாலடி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் கருப்பு பட்டியலில் இருந்த 5,000 தீவிரவாதிகளின் பெயர்கள் திடீர் நீக்கம் : எப்ஏடிஎப் கூட்டத்தில் பேசப்படும் என்பதால் தடாலடி

புதுடெல்லி,:கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 5,000 தீவிரவாதிகளின் பெயரை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது. எப்ஏடிஎப் கூட்டத்திற்கு முன்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு சர்வதேச அளவில் நிதி நடவடிக்கை பணிக்குழு  (எப்ஏடிஎப்) என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத அமைப்புக்கு செல்லும் நிதியையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. ஐ.நா-வால் அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஹபீஸ் சயீத் மற்றும் மவுலானா மசூத்  அசார் ஆகியோருக்கு எதிராக பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதி நடவடிக்கை  பணிக்குழு வழிகாட்டுதல்களின்படி சில நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், அவர்களை மறைமுகமாக ஆதரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் வரும் 21ம் தேதி நடக்கவிருக்கும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டத்திற்கு முன்பே, பாகிஸ்தான் அரசு கருப்பு பட்டியலில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் பெயர்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் காரணமாக, 5,000 தீவிரவாதிகளும் எங்கும் எளிதாக சென்று வரமுடியும். தற்போது பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எடுத்துள்ள கருப்பு பட்டியல் பெயர்கள் நீக்கமானது வருகிற நாட்களில் நடைபெறும்  சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டத்தில் பேசவாய்ப்புள்ளதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அரசு தீவிரவாத எதிர்ப்புச் சட்டப் பட்டியலில் தடைசெய்யப்பட்ட 7,600 தீவிரவாதிகளின் பெயர்களை வைத்துள்ளது. அந்த பட்டியலில் இருந்துதான் தற்போது ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களை அமைதியாக நீக்கியுள்ளது. அந்நாட்டு உள்துறை அமைச்சர் எஜாஸ் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் தீவிரவாத அமைப்பு மற்றும்  தீவிரவாதிகளின் கணக்கு இருப்பது, கருப்பு பட்டியலில் இடம் பெற்றால்,  பாகிஸ்தான் பிற நாடுகளிடமிருந்து கடன் வாங்குவது பாதிக்கப்படும். எனவே  பாகிஸ்தான் தற்போது தடாலடி நடவடிக்கையை எடுத்துள்ளது.இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களில் சாம்பல் நிற பட்டியலில் உள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி ஆதாரம் குறித்து விவாதிக்கும் போது, கருப்பு பட்டியல் விஷயம் விவாதிக்கப்பட்டால் பெரும் பின்னடைவே ஏற்படுத்தும். அதனால், 5,000 தீவிரவாதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டன’ என்றார்.

மூலக்கதை