போலி மது குடித்த 5 பேர் பலி : 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு தீவிர சிகிச்சை; பாலக்காடு அருகே சோகம்

தினகரன்  தினகரன்
போலி மது குடித்த 5 பேர் பலி : 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு தீவிர சிகிச்சை; பாலக்காடு அருகே சோகம்

பாலக்காடு, - கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே செல்லம்காவு ஆதிவாசி காலனியில் போலி மது குடித்து 5 பேர் உயிரிழந்தனர். 3 பெண்கள் உள்பட 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே கஞ்சிக்கோடு செல்லம்காவு ஆதிவாசி காலனியைச் சேர்ந்த சிவன் (37) என்பவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு ஆதிவாசி காலனியை சேர்ந்த ராமன் (61), ஐயப்பன் (58), சிவன் (37), மூர்த்தி (28) ஆகியோர் சிவனிடம் மது வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் ராமன் என்பவர் வாந்தி எடுத்து மயங்கி சரிந்தார். அவரை பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று முன்தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இயற்கை மரணம் என நினைத்த அக்கம்பக்கத்தினர் ராமனின் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிவனிடம் மது வாங்கி குடித்த ஐயப்பனும் உயிரிழந்தார். இவரும் இயற்கையாக மரணம் அடைந்ததாக கூறி உறவினர்கள் அடக்கம் செய்தனர். துக்க வீட்டிற்கு வந்த 3 பெண்கள் உள்பட 13 பேர் சிவனிடம் இருந்து மது வாங்கி குடித்தனர்.இதில் ருக்மணி (52), தங்கமணி (47), கமலம் (42), அருண் (22), நாகராஜ் (25), சக்திவேல் (22), குமாரன் (35), முருகன் (30)ஆகியோர் உள்பட 13 பேருக்கும் உடல் நலம் குன்றியது. இதையடுத்து அனைவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டனர்.நேற்று சிகிச்சையிலிருந்து மூர்த்தி (28) என்ற வாலிபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில், பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலி மது விற்ற சிவனும் நேற்று உயிரிழந்தார். போலி மது குடித்ததால் 2 நாட்களில் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் 3 பெண்கள் உட்பட 9  பேர் பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அருண் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.போலி மது குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புதுசேரி, வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை