பீகார் தேர்தல் இப்படிதான் போகுது... 70 தொகுதியில் ஒரே சாதி வேட்பாளர்கள் போட்டி

தினகரன்  தினகரன்
பீகார் தேர்தல் இப்படிதான் போகுது... 70 தொகுதியில் ஒரே சாதி வேட்பாளர்கள் போட்டி

பாட்னா,:பீகார் தேர்தலில் 70 தொகுதியில் ஒரே சாதி வேட்பாளர்கள் எதிரெதிராக போட்டியிடுகின்றனர். வெற்றியை தீர்மானிக்க ஒரே மாதிரியாக பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்திய தேர்தல் அரசியலில் வேட்பாளர்கள் தகுதி மற்றும் சேவையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் வேட்பாளர்கள் தேர்வில் குடும்பம், பிராந்தியம், சாதி, மதம், இனம் ஆகியவற்றில் இவையெல்லாம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வைத்தே வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். மத, சாதிய தீவிரம் அதிகமாக உள்ள பீகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், 70 தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியின் வேட்பாளருக்கு எதிராக அதே சாதியின் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சாதி சார்ந்த நபர்களின் எண்ணிக்கையை கணித்து, ஆளும் கட்சி, எதிர்கட்சி என்றில்லாமல், லெட்டர் பேட் கட்சிகள் கூட சாதியின் பின்னணியில் உள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. குறிப்பாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான பாஜக கூட்டணியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியும், தங்களது வேட்பாளர்களை ஒரே சாதியை சேர்ந்தவர்களை எதிரெதிர் போட்டியாளர்களாக தேர்வு செய்து களம் இறக்கி உள்ளன. மூன்று கட்டமாக நடக்கும் தேர்தலில் இதுவரை 70 தொகுதிகளில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர். மேற்கண்ட தொகுதியின் பெரும்பாலான வேட்பாளர்கள் யாதவ் சாதியை சேர்ந்தவர்கள். அதேபோல், ராஜ்புத் மற்றும் பூமிஹார் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சீமஞ்சல் தொகுதியில் முஸ்லிம்களும் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். குறிப்பிட்ட சாதிக்கு எதிராக மற்ெறாரு சாதியை சேர்ந்த வேட்பாளர்களின் போட்டி அதிகளவில் முதற்கட்டமாக நடக்கும் தொகுதிகளில் உள்ளன. அதன்படி பார்த்தால் முதற்கட்டமாக நடக்கும் 26 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக நடக்கும் 25 தொகுதிகளிலும் இந்த நிலவரம் உள்ளது. பீகார் மாநிலத்தில் யாதவர் மக்கள் தொகை மற்ற சாதிகளை விட அதிகம். அதனால், பல்வேறு கட்சிகளும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் நிறுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை