பிப்ரவரிக்குள் இந்தியாவில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் : மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிபுணர் குழு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
பிப்ரவரிக்குள் இந்தியாவில் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் : மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிபுணர் குழு எச்சரிக்கை

டெல்லி : வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் 50% பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் கொரோனா தடுப்பு நிபுணர் குழு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கியது. கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிபுணர் குழுவில் ஹைதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் வித்யாசாகர் தலைமையில் 10 பேர் கொண்ட உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இந்நிலையில் அவர்கள் தற்போது மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், தற்போது இந்திய மக்கள் தொகையில் 30% பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 30% மக்கள் ஆண்டிபாடிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குவதாலும், குளிர்காலம் வரவிருப்பதாலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஊரடங்கோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  நிபுணர் குழு உறுப்பினரும் இந்திய  இன்ஸ்டிடியூட் டெக்னாலாஜியின் பேராசரியருமான மனிந்த்ரா அகர்வால் கூறுகையில், “ தற்போது இந்திய மக்கள் தொகையில்  30 சதவிதம் பேருக்கு  கொரோனா பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என  கணித மாடல் படி நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். வரும் பிப்ரவரியில் இது 50 சதவீதமாக உயரக்கூடும்.  மத்திய அரசின் செரோ சர்வேவை விட தற்போது தொற்று பரவல் அதிகமாக உள்ளது” என்றார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சம் ஆகும். உலக நாடுகளின் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவை நெருங்க இந்தியாவுக்கு இன்னும் 9 லட்சம் தான் குறைவு. இந்த நிலையில் நாட்டில் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று சரிந்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் 55,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 589 பேர் உட்பட இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.15 லட்சத்தை தாண்டியது.

மூலக்கதை