'அவங்க ஒரு ‘ஐட்டம்’ .. காங்கிரசில் இருந்து விலகி பாஜ சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளரை சாடிய மாஜி முதல்வர் கமல்நாத்

தினகரன்  தினகரன்
அவங்க ஒரு ‘ஐட்டம்’ .. காங்கிரசில் இருந்து விலகி பாஜ சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளரை சாடிய மாஜி முதல்வர் கமல்நாத்

போபால்,:காங்கிரசில் இருந்து விலகி பாஜ சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என முன்னாள் முதல்வர் கமல்நாத் பேசியதால், மத்திய பிரதேச தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக  இருந்த இமார்த்தி தேவி மற்றும் 21 எம்எல்ஏக்கள் காங்கிரசில் இருந்து விலகி  பாஜகவில் சேர்ந்தனர். இதனால், முதல்வராக இருந்த கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.  அதன் தொடர்ச்சியாக, 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ. 3ம்  தேதி நடைபெறுகிறது. காங்கிரசில் இருந்து விலகி பாஜக சார்பில்  டப்ரா தொகுதியில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இமார்த்தி தேவிக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அதில், அந்த பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும், ‘நான் அவரது (இமார்த்தி தேவி) பெயரைச் சொல்லத் தேவையில்லை. என்னைவிட நீங்கள் அனைவரும் அவரை நன்கு அறிவீர்கள். அவர் என்ன மாதிரியான நபர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு ஐட்டம்’ என்று கமல்நாத் கூறினார். கமல்நாத் இவ்வாறு குறிப்பாக பேசிய போது, அங்கிருந்தவர்கள் இமர்த்தி தேவி என்று கோஷமிட்டனர். முன்னாள் முதல்வர் பெண் வேட்பாளர் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘ஒரு பெண் வேட்பாளருக்கு எதிரான இத்தகைய கருத்துக்கள், காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைமையின் உள்ளார்ந்த அணுகுமுறையைக் காட்டுகின்றன. இது இமர்தி தேவிக்கு மட்டுமல்ல, எம்பி-யின் மகள்கள், சகோதரிகளுக்கும்  ஏற்பட்ட அவமானம். மக்கள் இதனை  பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். இந்நிலையில், கமல்நாத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இன்று போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதேேபால், இந்தூரில் மாநிலங்களவை உறுப்பினர் சிந்தியா தலைமையில் கண்டன போராட்டம் நடந்தது.

மூலக்கதை