7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

தினகரன்  தினகரன்
7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

அபுதாபி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் சீசனின் 37வது லீக் ஆட்டத்தில் சென்னை  ராஜஸ்தான் அணிகள் நேற்று இரவு மோதின. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடந்த இபோட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இது ஐபிஎல் தொடரில் அவர் களமிறங்கும் 200வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை அணியில் பிராவோ, கர்ணுக்கு பதிலாக ஹேஸல்வுட், சாவ்லா இடம் பெற்றனர். ராஜஸ்தான் அணியில் உனத்கட் நீக்கப்பட்டு, ராஜ்பூட் சேர்க்கப்பட்டார். சாம் கரன், டு பிளெஸ்ஸி இருவரும் சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். டு பிளெஸ்ஸி 10 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த வாட்சன் 8 ரன்னில் வெளியேற, சிஎஸ்கே 4 ஓவரில் 26 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. கோபால், திவாதியா இருவரும் அபாரமாகப் பந்துவீசி சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். சாம் கரன் 22 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), ராயுடு 13 ரன் (19 பந்து, 2 பவுண்டரி) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை அணி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், கேப்டன் தோனி  ஜடேஜா இருவரும் இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. தோனி 28 ரன் எடுத்து (28 பந்து, 2 பவுண்டரி) ரன் அவுட்டானார். சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. ஜடேஜா 35 ரன் (30 பந்து, 4 பவுண்டரி), கேதார் ஜாதவ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர், தியாகி, கோபால், திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இவர்களில் ஆர்ச்சர் ஓவருக்கு சராசரியாக 5 ரன் விட்டுக்கொடுக்க, கோபால் (3.50), திவாதியா (4.50) இன்னும் கஞ்சத்தனமாக செயல்பட்டு அசத்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். இதில் பென் ஸ்டோக் 19 ரன் எடுத்து (11 பந்து, 3 பவுண்டரி) சாகர் வசம் பிடிபட்டார். உத்தப்பா 4 ரன்னுடனும், சாம்சன் டக் அவுட்டாகினர். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித் 26 ரன்களும் (34 பந்து, 2 பவுண்டரி), பட்லர் 70 ரன்களும் (48 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக சாகர் 2 விக்கெட்டுகளும் ஹேசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு நிர்ணயித்த 126 ரன் இலக்கை எட்டி பிடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மூலக்கதை