ஐக்கிய அமீரகத்தில் அசத்தல் சூப்பர் ஓவர்... டபுள் சூப்பர் ஓவர்

தினகரன்  தினகரன்
ஐக்கிய அமீரகத்தில் அசத்தல் சூப்பர் ஓவர்... டபுள் சூப்பர் ஓவர்

யுஏஇ: நேற்று முன்தினம் துபாயிலும், அபுதாபியலும் நடந்த லீக் போட்டிகள் வரலாற்றில் இடம் பிடித்து விட்டன. அதற்கு காரணம் ஒரே நாளில் 2 போட்டிகள் சூப்பர் ஓவரின் மூலம் முடிவுகளை எட்டியதுதான். அதிலும் கொல்கத்தா-ஐதராபாத் இடையிலான போட்டி ‘ஒரு’ சூப்பர் ஓவர் மூலம் முடிவை எட்டியது என்றால்....  பஞ்சாப்-மும்பை இடையிலான போட்டி ‘இரு’ சூப்பர் ஓவர்கள் மூலம் முடிவுக்கு வந்தது.* சூப்பர் ஓவர்-ஒன்று: புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்த கொல்கத்தாவும், ஐதராபாத்தும் வெற்றிக்கு அதிக முனைப்பு காட்டியதால்  போட்டி சூப்பர் ஓவர் வரை நீண்டது. இந்த 2 அணிகளும் ஐபிஎல் தொடரில் சூப்பர் ஓவரில்  ஆடியதில்லை. ஆனால் உலக கோப்பபை பைனலில் ஆடிய கொல்கத்தா வீரர்கள் மோர்கன்(இங்கிலாந்து), பெர்குசன்(நியூசிலாந்து), ஐதராபாத் வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ(இங்கிலாந்து) கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து) ஆகியோருக்கு ஏற்கனவே ‘சூப்பர் ஓவர்’அனுபவம் இருந்தது.* வார்னர் 5000: அபிதாபியில் நடந்த போட்டியில்  கேப்டன் வார்னர் கடைசி வரை களத்தில் இருந்ததால் ஐதராபாத் எளிதில் வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரத்தில் 10ரன் எடுத்த போது ஐபிஎல் போட்டிகளில் 5000ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் வார்னர் 4வது இடத்தை பிடித்தார். இதுவரை 135 போட்டிகளில் விளையாடி 5037 ரன் எடுத்துள்ளார். முதல் 3 இடங்களில் கோஹ்லி(186போட்டி, 5759ரன்), ரெய்னா (193போட்டி, 5368ரன்), ரோகித்(197போட்டி, 5158ரன்) ஆகியோர் உள்ளனர்.* வந்தார்... வென்றார்... வார்னரின் கனவை கலைத்த லோக்கி பெர்குசனுக்கு முதல் 8 போட்டிகளில் விளையாட  வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அசத்தி விட்டார். மொத்தம் 4 ஓவர் வீசி 15ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3விக்கெட்களை வீழ்த்தினார். அதுமட்டுமல்ல சூப்பர் ஓவரிலும் 2விக்கெட்களை எடுத்தார். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட பெர்குசன், ‘வார்னர் விக்கெட்டை சூப்பர் ஓவரில் கைப்பற்றியது எனக்கு பிடித்திருந்தது.  கேப்டன் மோர்கன் எதையும் அமைதியாக கையாளுவது மிகவும் நன்றாக உள்ளது.  எனது திட்டம் விளையாட்டு முழுவதும் வேலை செய்துக் கொண்டிருந்தது. கடினமான களத்தில் இது நல்ல வெற்றியாகும்’ என்றார்.* சூப்பர் ஓவர்கள்- இரண்டு: துபாயில் நடந்த மும்பை-பஞ்சாப் இடையிலான போட்டி 2 சூப்பர் ஓவர் போட்டிகளால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போட்டி திங்கட்கிழமை வரை நீண்டது. நடப்புத் தொடரில் மும்பைக்கு ஏற்கனவே சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரை வீழ்த்திய அனுபவம். பஞ்சாப் அணிக்கு ஏற்கனவே சூப்பர் ஓவரில் டெல்லியிடம் தோற்ற அனுபவம். அதனால் அதிக எதிர்பார்பை  ஏற்படுத்திய மும்பை-பஞ்சாப்  சூப்பர் ஓவர்களில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை.நடுக்கமில்லை... கோபம்தான்.... அணியை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று போராடிய  பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால்  2வது சூப்பர் ஓவரில் வெற்றிக்கு 12ரன் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்திலேயே சிக்சர் விளாசி நம்பிக்கை ஏற்படுத்தியவர் ‘யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கேல். அதனால் பாராட்டுகளை அள்ளினார். போட்டிக்கு பிறகு கேல், சகவீரர் மயங்க் அகர்வாலிடம், ‘நான் பதட்டமாக இல்லை. ஆனால்  நாம் இந்த நிலைக்கு வந்ததால்  நான் கோபமாகவும், கூடவே வருத்தமாகவும் இருந்தேன். ஆனால் இது கிரிக்கெட் விளையாட்டு. அதனால் எதுவும் நடக்கும்’ என்று கூறியுள்ளார். இந்த 2வது சூப்பர் ஓவரில் கேல் 7 ரன் எடுக்க, மயங்க் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி 2 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் வெற்றியை வசப்படுத்தினர்.

மூலக்கதை