தியாகியை 23 ஆண்டுகளாக பென்ஷனுக்காக அலைய விட்ட அதிகாரிகள்: உயர் நீதிமன்றம் கண்டனம்

தினமலர்  தினமலர்
தியாகியை 23 ஆண்டுகளாக பென்ஷனுக்காக அலைய விட்ட அதிகாரிகள்: உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: 'சுதந்திர போராட்ட வீரரை, 99 வயதில் நீதிமன்றத்தை அணுக வைத்ததற்காக, அதிகாரிகளின் செயலற்ற தன்மைக்கு வெட்கப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வழக்கில் உடனடியாகபதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த, 99 வயதான, எஸ்.கபூர் என்பவர் தாக்கல் செய்த மனு:நேதாஜியின் இந்திய விடுதலை படையில் சேர்ந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டேன். பிரிட்டிஷ் படையினரால் கைது செய்யப்பட்டு, மியான்மர் ரங்கூன் சிறையில், 1945 ஜூலை முதல், 1946 ஜனவரி வரை இருந்தேன்.

மீண்டும் தமிழகம் வந்த நான் வருமானம் இல்லாததால், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான, 'பென்ஷன்' கேட்டு, 1997ல் விண்ணப்பித்தேன். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தேன். மத்திய அரசிடம் இருந்தும், எனக்கு வந்த கடிதத்தில், மாநில அரசுடன் ஆலோசித்து, மனுவை பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.பலமுறை கலெக்டர்அலுவலகம் சென்றும், எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த வயதிலும், அலைக்கழிக்கப்பட்டேன்.

2011ல், தேவையான ஆவணங்களை இணைத்து, தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தேன். உரிய விசாரணைக்கு பின், பென்ஷன் அளிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின், எந்த பதிலும் இல்லை.எந்த பலனும் இல்லைமாவட்ட கலெக்டரிடம்,2014ல், நினைவூட்டும் கடிதம் அளித்தேன். மீண்டும் ஆவணங்களை அளித்தேன். கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு முன் ஆஜரானேன். அதைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டில், பலமுறை கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றேன்; எந்த பலனும் இல்லை.முதல்வரின் தனிப்பிரிவுக்கு, மனு அனுப்பினேன். மத்திய - மாநில அரசு திட்டத்தின்படி, எனக்கு தகுதி இருந்தும், எந்த காரணமும் இன்றி மனுவை நிலுவையில் வைத்துள்ளனர். 23 ஆண்டுகளாக, 99 வயதிலும் கூட அலைக்கழிக்கப்படுகிறேன்.எனவே, என் விண்ணப்பத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து, பென்ஷன் வழங்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:சுதந்திர போராட்ட வீரர் என்ற, அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், 99வது வயதில், இந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மத்திய - மாநில அரசுகளிடம், பென்ஷன் கோரி, 1997ல் விண்ணப்பித்துள்ளார். மாநில அரசு அதிகாரிகள் விசாரித்து, ஆவணங்களுடன் பரிந்துரைக்கும்படி, மத்திய அரசு கூறியுள்ளது.இதையடுத்து, தாசில்தார் விசாரித்து, 2011ல் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். கலெக்டர் முன் ஆஜரானதாக மனுதாரர் கூறியுள்ளார். பலமுறை மனு அனுப்பியும், கலெக்டர் அலுவலகத்திலேயே நிலுவையில் உள்ளது. மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.


விசாரணை தள்ளிவைப்பு

இந்த விஷயங்கள் எல்லாம் உண்மை என்றால், பென்ஷன் கேட்டு, 99 வயதில் நீதிமன்றத்தை அணுக வைத்ததற்காக, அதிகாரிகளின் செயலற்ற தன்மைக்கு வெட்கப்பட வேண்டும். மனுதாரருக்கு, 99 வயது; இந்த வழக்கை விரைந்து முடிக்க, நீதிமன்றம் விரும்புகிறது.எனவே, மத்திய அரசிடம் இருந்து, உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், உடனடியாக பதில் பெற வேண்டும். மாநில அரசு அதிகாரிகளும், உடனடியாக பதில் அளிக்க வேண்டும். விசாரணை, நவ., 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை