என்ன விளையாட்டா! 133 லே-அவுட் கோப்பு மாயம்:கிழக்கு மண்டலத்தில் அதிர்ச்சி!

தினமலர்  தினமலர்
என்ன விளையாட்டா! 133 லேஅவுட் கோப்பு மாயம்:கிழக்கு மண்டலத்தில் அதிர்ச்சி!

கோவை:கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியை சேர்ந்த, 133 லே-அவுட் தொடர்பான கோப்புகள், மாயமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, ஒரு லே-அவுட் உருவாக்கும்போது, 10 சதவீதம் பொது ஒதுக்கீடு (ரிசர்வ் சைட்) இடம் ஒதுக்கி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்படைக்க வேண்டும். அப்பகுதியை சுற்றி கம்பி வேலி அமைத்து, அரசுக்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.வேறு யாரும் போலி ஆவணம் தயாரித்து, விற்பனை செய்ய முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ரிசர்வ் சைட்' பட்டியலை பத்திரப்பதிவு துறைக்கு வழங்கி, பத்திரப்பதிவு செய்யாமல் தடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், கட்டட வரைபட அனுமதி கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.2011ல் மாநகராட்சியுடன், 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன. அதில், காளப்பட்டி பேரூராட்சியும் ஒன்று. அப்போது, 160 லே-அவுட்டுகள் ஒப்படைக்கப்பட்டதாக, மாநகராட்சி இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கிழக்கு மண்டல அலுவலகத்தில், 27 லே-அவுட்டுகளின் கோப்புகளே இருக்கின்றன. 133 லே-அவுட்டுகளுக்கான கோப்புகளை காணவில்லை.மாநகராட்சி வசம் ஒப்படைத்த லே-அவுட்டுகளில் உள்ள, 'ரிசர்வ் சைட்'டுகளில் ஏராளமானவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. சிலவற்றுக்கு போலி ஆவணம் தயாரித்து, விற்கப்பட்டுள்ளன.சில இடங்களை நகரமைப்பு பிரிவினர் போராடி மீட்டாலும் கூட, உடனடியாக வேலி போடாமல், பொறியியல் பிரிவினர் மெத்தனம் செய்வதால், மீண்டும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:'ரிசர்வ் சைட்'டுகளை மீட்பதற்கு, தனி குழு ஏற்படுத்த வேண்டும். பொது ஒதுக்கீடு இடங்கள் மட்டுமின்றி, 100 வார்டுக்கு உட்பட்ட அனைத்து லே-அவுட்டுகள், வீதிகளில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான, அனைத்து சொத்துகள் விவரங்களையும், பட்டியலிட வேண்டும்.அதாவது, மாநகராட்சி பள்ளி, வரி வசூல் மையம், மைதானம், சமுதாய கூடம், வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான சொத்துகளையும் அடையாளம் கண்டு, ஆவணப்படுத்தி, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள மாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தெரிவித்து, அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். மீட்கப்படும் இடங்களில் உடனடியாக வேலி அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இதற்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி, போதுமான ஊழியர்கள், வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை