உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு எதிராக புகார்கள் குவிகிறது: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டு: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு எதிராக புகார்கள் குவிகிறது: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா இருக்கிறார். இவர், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திர நீதிமன்ற செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனதுசெல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்,ஏ.பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில், ‘நீதிபதி ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்த வேண்டும்,’ என வழக்கறிஞர் சுனில் குமார் சிங் என்பவர் தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளார். அதேபோல், ‘ஜெகன் மோகன் ரெட்டி மீது நிதி மோசடி, ஊழல், 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் முதல்வர் பதவியில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர். அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும்,’ என வழக்கறிஞர் ஜி.எஸ்.மணியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடத்தப்பட்ட உயர்நிலை கூட்டத்தில், ஜெகனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில், ‘நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் விதமாக, மூத்த நீதிபதியை பகிரங்கமாக விமர்சனம் செய்ததை அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜெகன் மோகன் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

மூலக்கதை