காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரர்களின் அன்பு பேச்சால்: சரண் அடைந்த தீவிரவாதி: வைரலாகும் வீடியோ

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரர்களின் அன்பு பேச்சால்: சரண் அடைந்த தீவிரவாதி: வைரலாகும் வீடியோ

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி, ராணுவ வீரர்களின் அன்பான பேச்சால் சரண் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள், தீவிரவாதி சரணடையும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி  வளைத்துள்ளனர். பதுங்கி இருந்த தீவிரவாதியை வெளியே வரும்படி வீரர்கள் அழைப்பு விடுத்தனர். ‘கடவுளை நினைத்து சரணடையுங்கள், உங்கள் குடும்பத்தின் நிலைமையை நினைத்து பார்த்து சரணடையுங்கள். எந்த வீரர்களும் உங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தமாட்டார்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் வெளியே வாருங்கள்,’ என வீரர்கள் அழைக்கின்றனர். இதனை தொடர்ந்து, ஒரு தீவிரவாதி அமைதியாக நடந்து வந்து வீரர்கள் முன் அமர்கிறார். பின்னர், அவருக்கு சக வீரர்களை தண்ணீர் கொடுக்குமாறு கூறுகிறார்கள். அவரது பெயர் ஜஹாங்கீர் பாத்,  சில நாட்களுக்கு முன்புதான் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததும் தெரிந்தது. அவரிடம்  இருந்து ஏகே 47  துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது  தீவிரவாதியின் தந்தையும் உடன் இருந்தார். அவர் தனது மகனை தீவிரவாதத்தில் இருந்து மீட்டதற்காக வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.தீவிரவாதி  சுட்டுக்கொலைஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின்,  லார்னோ பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை நேற்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் சுட்டனர் இதற்கு, வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் பெயர் நசீர் என்கிற ஷகீல் சாப். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன். வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்தவன் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை