மீட்சிக்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை தகவல்

தினமலர்  தினமலர்
மீட்சிக்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை தகவல்

புதுடில்லி:கடந்த ஆறு மாதங்களாக, மிகுந்த அழுத்தத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இருப்பினும், மீட்சி பலவீனாமாக இருப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிரிக்வொர்க்ஸ் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 13.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் கணித்துள்ளது. அத்துடன், பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளாதபட்சத்தில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 9.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன. நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்டில், 52 சதவீதமாக இருந்தது; செப்டம்பரில், 56.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும், ஜி.எஸ்.டி., வசூல், 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஆகஸ்ட் மாத வசூலை விட, 10 சதவீதம் அதிகமாகும்.


மேலும், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 3.8 சதவீதம் உயர்வாகும். இதேபோல், பயணியர் வாகன விற்பனையும், 31 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடவே, ரயில்வே சரக்கு போக்குவரத்தும், 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல; ஏற்றுமதியும், 5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இவை போன்ற அறிகுறிகள், பொருளாதாரம் மீட்சி காண்பதை அறிவிப்பதாக இருக்கிறது. இருப்பினும், சில அறிகுறிகள், மீட்சி பலவீனமாக இருப்பதையும் காட்டும் விதமாக இருக்கின்றன.புதிய திட்டங்களில் மூலதன செலவுகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில், 81 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.


முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.முக்கிய எட்டு தொழில்துறைகளில், உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில் மைனஸ், 8.5 சதவீதமாக இருக்கிறது. எண்ணெய் அல்லாத தங்கம் அல்லாதவற்றின் இறக்குமதியும் சரிவைக் கண்டுள்ளது.பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், கடும் சரிவை சந்தித்திருக்கும் கட்டுமானம், விருந்தோம்பல், போக்குவரத்து, கிடங்கு போன்ற துறைகள் மெதுவாகவே மீட்சியைக் காணும்.எளிதாக தொழில் செய்வது, அரசு தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.


இருப்பினும், பொருட்களை வினியோகம் செய்வதில் இருக்கும் தடைகளை உடனடியாக சரிசெய்து, தேவையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட முயற்சிகள் மூலமாக, பொருளாதார மீட்சியை அரசு விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எளிதாக தொழில் செய்வது, அரசு தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும், பொருட்களை வினியோகம் செய்வதில் இருக்கும் தடைகளை உடனடியாக சரிசெய்து, தேவையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மூலக்கதை