இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ்

தினமலர்  தினமலர்
இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ்

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். அப்பாவைப் போலவே அவரும் பிரபல சினிமா பாடகராக உள்ளார். 2000ம் ஆண்டு மலையாளப் படத்தில் பாடி தன் திரைப்பயணத்தை தொடங்கினார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மலையாளத்தில் 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசின் விருதும், 5 முறை பிலிம்பேர் விருதுகளும், 2014ம் ஆண்டு நந்தி விருதும் பெற்றவர் விஜய் யேசுதாஸ்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. எனவே இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை' என அதிரடியாக விஜய் யேசுதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மலையாளத்தில் தான் பலமுறை பலரிடம் அவமானப்பட்டுள்ளதாகவும், எனவே இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவு மலையாளப் படங்களுக்கு மட்டும் தான் என்றும், தமிழ், தெலுங்கு மொழிகளில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கின்றனர் என்றும் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.

விஜய் யேசுதாஸின் இந்த அறிவிப்பு மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை