பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் 10 லட்சம் பேருக்கு வேலை: மகாபந்தன் கூட்டணி வாக்குறுதி

தினகரன்  தினகரன்
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் 10 லட்சம் பேருக்கு வேலை: மகாபந்தன் கூட்டணி வாக்குறுதி

பாட்னா: ‘பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்,’ என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.  பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பாஜ, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஜனசக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இது பற்றி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக நிதிஷ் குமார் ஆட்சியில் இருந்த போதிலும் பீகார் மாநிலம் இதுவரை சிறப்பு அந்தஸ்தை பெறவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்து இதற்கு பொறுப்பேற்க மாட்டார். * நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பத்து லட்சம் வேலைவாய்ப்புக்கு அனுமதி அளிப்போம்.* அரசு தேர்வு எழுத செல்வோரின் பயண செலவுகளை அரசு ஏற்கும்.* விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை நீக்குவதற்கான மசோதா கொண்டு வரப்படும். * மாநில பட்ஜெட்டில் 12 சதவீதம் கல்வித்துறைக்காக செலவு செய்யப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை