காருடன் வெள்ளத்தில் சிக்கியவரின் கடைசி அபயக்குரல் ப்ளீஸ்... யாராவது வந்து என்னை காப்பாத்துங்க: சமூக வலைதளங்களில் வைரல்

தினகரன்  தினகரன்
காருடன் வெள்ளத்தில் சிக்கியவரின் கடைசி அபயக்குரல் ப்ளீஸ்... யாராவது வந்து என்னை காப்பாத்துங்க: சமூக வலைதளங்களில் வைரல்

ஐதராபாத்: ஐதராபாத் வெள்ளத்தில் காருடன் சிக்கிய ஒருவர், தன்னை காப்பாற்றும்படி கடைசியாக தனது நண்பருடன் செல்போனில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், 17 மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. தெருக்களிலும், வீடுகளிலும் கூட வெள்ளம் ஓடியது. இந்த மழை வெள்ளம் சார்ந்த விபத்துகளில் இதுவரையில், மாநிலம் முழுவதும் 50 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், ஐதராபாத்தில் காருடன் சிக்கிய ஒருவர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதற வைத்தது. யார் அவர்? அவருக்கு என்னவானது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கி சாகும் முன்பாக கடைசியாக அவர் தனது நண்பருக்கு போன் செய்து, தன்னை காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். இதன் மூலம், அவர் பெயர் வெங்கடேஷ் கவுட் என்று தெரிய வந்துள்ளது. அவர், கடைசியாகத் தன்னிடம் பேசியதை விளக்கியுள்ளார் அவரது நண்பர். கவுட்: என்னுடைய கார் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டது. ஒரு மரத்தில் சிக்கி, தற்காலிகமாக கார் நிற்கிறது. உடனடியாக யாராவது வந்து காப்பாற்றுங்கள். நண்பர்: பயப்படாதே... அருகில் இருக்கும் மரம் அல்லது சுவரில் ஏறிக்கொள்...கவுட்: பக்கத்தில் சுவர் தெரிகிறது. ஆனால், காரை விட்டு வெளியே வந்தால் வெள்ளத்தில் சிக்கிக் கொள்வேன்...  இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மரத்தில் சிக்கி இருந்த காரை வெள்ளம் இழுத்துச் செல்கிறது. காருக்குள் தண்ணீர் நிரம்புகிறது. காரின் சக்கரம் கழன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால், காரிலிருந்து வெளியேறி அருகில் உள்ள மின் கம்பத்தைப் பற்ற முயல்கிறார் கவுட். ஆனால், வெள்ளத்தின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், அவர் அடித்துச் செல்லப்படுகிறார். அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை கரையில் இருந்து 2 பேர் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். ஆனால், அவரை காப்பாற்றுவதற்கு ஒன்றுமே செய்ய முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். அவர்களின் கண்ணெதிரே வெள்ளத்தில் அவர் மூழ்குகிறார். கடைசியாக அவர் தனது நண்பருடன் செல்போனில் பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2 நாளுக்குப் பிறகு, ஒரு ஏரியில் கவுட்டின் சடலம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

மூலக்கதை