'ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது

தினமலர்  தினமலர்
ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது

பெரியகுளம்: ''தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்று அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடந்த, கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், அ.தி.மு.க.,வை வலுவான இயக்கமாகவும், கோட்டையாகவும் மாற்றியுள்ளனர். 'எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் நுாறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கும்' என, ஜெ., தீர்க்கமாக கூறினார்.

தற்போது கட்சி வலுவாக உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு விசுவாசமிக்க தொண்டர்களாக நாம் செயல்படுவது தான், கட்சிக்கு நாம் செய்யும் நன்றி கடன். கடமையை செய்யுங்கள்; பிரதிபலன் தானாக வந்து சேரும்.வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சேர்த்தல் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும், ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு, நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.

மூலக்கதை