கொரோனா அதிகமாகும்? சுகாதார செயலர் அறிவுரை!

தினமலர்  தினமலர்
கொரோனா அதிகமாகும்? சுகாதார செயலர் அறிவுரை!

சென்னை : ''பண்டிகை நாட்களுக்கு பின், பல்வேறு மாநிலங்களில், தொற்று பாதிப்பு அதிகமானதால், தமிழக மக்கள் விழிப்புடன் இருந்து, தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த, உலக விபத்து தடுப்பு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற, அவர் அளித்த பேட்டி:தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ௪,௦௦௦ என, குறைந்துள்ளது, சற்று ஆறுதல் அளிக்கிறது.ஆனாலும், பொதுமக்கள்அலட்சியமாக இருக்கக்கூடாது. பல்வேறு மாநிலங்களில், பண்டிகை நாட்களுக்கு பின், பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.பண்டிகை நாட்களில், பொருட்கள் வாங்கச் செல்லும் போது, கவனமுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து, வணிகர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில், தற்போது குறைவது ஆறுதலானது என்றாலும், கொரோனா முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:சென்னையில், விபத்துகள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு, 50 சதவீதம் குறைந்துள்ளது.விபத்துகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதையசூழ்நிலையில், முக கவசம், தலைகவசம் இரண்டுமே அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல, மாநிலம் முழுதும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், உலக விபத்து தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.


மூலக்கதை