மருத்துவப் படிப்பு உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் எப்போது?

தினமலர்  தினமலர்
மருத்துவப் படிப்பு உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் எப்போது?

-மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விடை தெரிந்த பின் தான், தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும் என்பதால், கவர்னரின் அனுமதி விரைவில் கிடைக்கும் என, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் படி, மருத்துவ படிப்புகளில் சேர, நாடு முழுதும், பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி, 'நீட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களால், அதிகம் தேர்ச்சி பெற முடியவில்லை. குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால், குறைவான அளவிலேயே இம்மாணவர்களால், மருத்துவ படிப்பில் சேர முடிகிறது. இது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, 'நீட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பிற மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில், 7.5 சதவீத இடங்களை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடாக வழங்க அரசு முடிவு செய்தது.
இதற்காக, 'தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கை சட்டம்' சட்டசபையில், செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இன்னமும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், தமிழகத்தை சேர்ந்த, அரசு பள்ளி மாணவர்கள், 738 பேர் தேர்ச்சி பெற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தால், 300 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வழி பிறக்கும். அதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பின்னரே, மருத்துவ பட்ட படிப்பிற்கான கவுன்சிலிங்கை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.இதனால், மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுதொடர்பாக, சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், 'உள்ஒதுக்கீடு விவகாரத்தில், ஒரு வாரத்தில், கவர்னரிடம் இருந்து, சாதகமான தகவல் வரும் என, எதிர்பார்க்கிறோம். விரைவில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.



நல்ல முடிவு எடுப்பார்!



''மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, கவர்னர் புரோஹித் நல்ல முடிவு எடுப்பார். அவரது முடிவை, நாடே எதிர்பார்க்கிறது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இட ஒதுக்கீடு தொடர்பாக, கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று, நாடே எதிர்பார்க்கிறது.கவர்னர் முடிவுக்குப் பின் தான், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, தமிழகத்தில் நடக்கும். இட ஒதுக்கீடு பெறுவதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எந்தக் காலத்திலும், அரசு பின்வாங்காது. நீதிமன்றத்திலும், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார். - நமது நிருபர் -

மூலக்கதை