லெக் சைடில் மின்னல் வேக ஸ்ட்ரோக்குகள்! ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து அள்ளி விட்டேன்... மும்பை வீரர் டி காக் உற்சாகம்

தினகரன்  தினகரன்
லெக் சைடில் மின்னல் வேக ஸ்ட்ரோக்குகள்! ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து அள்ளி விட்டேன்... மும்பை வீரர் டி காக் உற்சாகம்

அபுதாபி: கேகேஆர் அணிக்கு எதிரான துரத்தலின்போது, எனது ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து பந்தை விரட்டும் ஆயுதத்தை எடுத்து விளையாடினேன்... என்று மும்பை வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. புதிய கேப்டன் மோர்கன் 39, பேட் கம்மின்ஸ் 53 ரன் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். அடுத்து களமிறங்கிய மும்பை 16.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தொடக்க வீரர்கள் டி காக் ஆட்டமிழக்காமல் 78*, ரோகித் சர்மா 35 ரன் எடுத்தனர். கொல்கத்தாவின் வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட் வீழத்தினர். அதிரடியாக ஆடிய டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் எடுத்த 78*ரன், ஐபிஎல் வாழ்க்கையில் அவரது 3வது அதிகபட்ச ஸ்கோராகும். அவர் 2016ல் டெல்லி அணியில் இருந்தபோது பெங்களூருக்கு எதிராக 108 ரன்னும், 2019ல் மும்பை வீரராக ராஜஸ்தானுக்கு எதிராக 81 ரன்னும் எடுத்துள்ளார். போட்டிக்குப் பிறகு பேசிய டி காக் கூறியதாவது: லெக் சைடில் பந்துகளை விரட்டும் ஆயுதம் எனது ஆயத களஞ்சியத்தில் இருந்து வந்தது. அதற்காக நான் பெரிதாக திட்டமிடுவதில்லை. இயல்பாகவே அந்த ஸ்ட்ரோக்குகள் வருகிறது. அதைத்தான் விளையாட்டில் காட்டுகிறேன். கடைசி ஆட்டத்தை நான் சரியாக முடிக்காதது ஏமாற்றமாக இருந்தது. தலைமை பயிற்சியாளர் மகேளா ஜெயர்வர்தனேவிடம் சில வார்த்தைகள் பேசினேன். அவரது ஆலோசனையின் படி சிலவற்றை சரி செய்து கொண்டேன். ஒரு வீரராக நீங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தவில்லை என்றால் ஜெயர்வர்தனேவிடம் இருந்து கடுமையை எதிர்பார்க்கலாம். நான் நேர்மையாக விளையாடினேன். உங்கள் அணிக்கு நீங்கள் சிறந்ததை செய்ய வேண்டும். முக்கியமாக நான் சிறந்த விக்கெட் கீப்பர். வேண்டுமென்றே நான் கேட்ச்களை தவறவிடவில்லை. அதனால் கவலைப்பட ஏதுமில்லை. இவ்வாறு டி காக் கூறியுள்ளார். மும்பை அணி தனது 9வது லீக் ஆட்டத்தில் இன்று இரவு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.

மூலக்கதை