தினமும் நடைபயிற்சி செய்து பூமி சுற்றளவை கடந்த முதியவர்

தினமலர்  தினமலர்
தினமும் நடைபயிற்சி செய்து பூமி சுற்றளவை கடந்த முதியவர்

லண்டன்:அயர்லாந்தில் தினமும் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த முதியவர் ஒருவர் பூமி சுற்றளவை கடந்துள்ளார். இதை 'கின்னஸ்' சாதனையாக அங்கீகரிக்க அவர் விண்ணப்பித்துள்ளார்.

அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான அயர்லாந்தில் வினோத் பஜாஜ் 70 வசித்து வருகிறார். நம் நாட்டின் பஞ்சாபில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவர் 43 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் குடிபெயர்ந்தார்.பருமனாக இருந்ததால் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

2016 முதல் தினமும் நடைப் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தான் வசிக்கும் காசில்ட்ராய் பகுதியின் 10 கி.மீ. பரப்பளவிற்கு உள்ளேயே இவர் நடைப் பயிற்சி செய்தார்.தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொண்டதன் வாயிலாக பூமியின் சுற்றளவான 40 ஆயிரம் கி.மீ. துாரத்தை இவர் கடந்துள்ளார்.

இதுகுறித்து வினோத் கூறியதாவது: நடை பயிற்சியால் ஆறு மாதங்களில் 12 கிலோ குறைந்தேன். அதிகாலை முதல் மதியம் வரை நடைபயிற்சி செய்தேன்.இதன் வாயிலாக கடைகளில் ஷாப்பிங் செய்வது வங்கி பணிகளை செய்து முடிப்பது வீட்டு மற்றும் தோட்ட பணிகளையும் செய்து முடிப்பேன்.என் ஒவ்வொரு அடியையும் 'டிராக்' செய்ய 'டிராக்கிங்' செயலியை போனில் பதிவிறக்கம் செய்து உபயோகித்தேன்.

அதன்பின் ஒரு ஆண்டில் 7600 கி.மீ. வரை நடந்தேன்.இரண்டு ஆண்டுகளில் 15 ஆயிரத்து 200 கி.மீ. துாரம் நடந்தேன். இது நிலவின் சுற்றளவை விட அதிகமாகும். இது என்னை மேலும் ஊக்கப் படுத்தியது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி பூமியின் சுற்றளவான 40 ஆயிரத்து 075 கி.மீ. துாரத்தையும் கடந்தேன். 5.46 கோடி அடிகளில் 1496 நாட்களில் இந்த துாரத்தை கடந்தேன். இதை 'கின்னஸ்' சாதனையாக அங்கீகரிக்க விண்ணப்பித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை