மாவட்டத்தில் 191 தற்காலிக தங்கும் மையங்கள் தயார்: கூடுதல் தலைமை செயலர் பனீந்திரரெட்டி தகவல்

தினமலர்  தினமலர்
மாவட்டத்தில் 191 தற்காலிக தங்கும் மையங்கள் தயார்: கூடுதல் தலைமை செயலர் பனீந்திரரெட்டி தகவல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக 191 தற்காலிக தங்கும் விடுதிகள் தயார் நிலையில் உள்ளதாக கூடுதல் தலைமை செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பனீந்திர ரெட்டி தெரிவித்தார்.

கடலுார் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு மீட்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் கால மீட்பு பணிகளில் ஈடுபட 3240 முதல்நிலை பொறுப்பாளர்களாக தன்னார்வலர்கள் கண்டறிப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மரங்களை வெட்டி அகற்ற 1390 நபர்கள், கால்நடைகளை பாதுகாக்க 1390 நபர்கள், 356 நீச்சல் வீரர்கள், 26 பாம்பு பிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப் பட்டு, தாழ்வான பகுதிகளில் ஆய்வு செய்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பருவ மழையை எதிர்கொள்ள மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மீட்பு பணிக்கு ரப்பர் மற்றும் பைபர் படகுகள், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண்- 1077 அழைத்து தேவைப்படும் உதவிகளை பெறலாம். 04142 220700, 233933, 221113, 221383 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மீட்பு பணிகளில் ஈடுபட தேவையான அளவில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அனுப்பி வைக்கப்படுவர் என, தெரிவித்தார்.

மூலக்கதை