அதிகரிக்கும் கொரோனா அமெரிக்காவில் நெருக்கடி

தினமலர்  தினமலர்
அதிகரிக்கும் கொரோனா அமெரிக்காவில் நெருக்கடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், முக்கிய மாகாணங்களில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது, கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், வாக்காளர்களுக்கும் புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இதுவரை வந்துள்ள தேர்தல் கணிப்புகளில், ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்காவின், 50 மாகாணங்களில், பெரும்பாலான மாகாணங்கள், பாரம்பரியமாக இரண்டில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்கும்.அதே நேரத்தில், சில குறிப்பிட்ட மாகாணங்களில் தான் இழுபறி இருக்கும். அந்த மாகாணங்கள்தான், வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும்.இழுபறி மாகாணங்களான இயோவா, மிச்சிகன், மின்னசோட்டா, ஓஹியோ, விஸ்கான்சின் ஆகியவற்றில், கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது.

இது மாகாண நிர்வாகத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆலோசனைகளில் மாகாண நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.அதே நேரத்தில், வாக்காளர்களும், ஜனநாயகக் கடைமையை நிறைவேற்ற தடை ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஜார்ஜியாவில், தேர்தலுக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் பணியாற்றும், 60 ஊழியர்களில், 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது.

இதையடுத்து மாற்று ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.சில இடங்களில், முன்னதாகவே ஓட்டுப் பதிவை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு நடந்தது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டளிக்க வந்ததால், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிஇருந்தது.தேர்தல் நெருங்கும் நேரத்தில், முக்கியமான மாகாணங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அரசியல் கட்சியினரிடம் மட்டுமல்லாமல், வாக்காளர்களுக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை