தொடருமா மும்பை வெற்றி * கோல்கட்டாவுடன் இன்று மோதல் | அக்டோபர் 15, 2020

தினமலர்  தினமலர்
தொடருமா மும்பை வெற்றி * கோல்கட்டாவுடன் இன்று மோதல் | அக்டோபர் 15, 2020

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ரோகித் சர்மாவின் மும்பை, தினேஷ் கார்த்திக்கின் கோல்கட்டாவை சந்திக்கிறது. நடப்பு சாம்பியன் மும்பை அணி (7ல் 5 வெற்றி) முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றது. பெங்களூருவிடம் சூப்பர் ஓவரில் வீழ்ந்தது. கடைசியாக களமிறங்கிய 4 போட்டிகளிலும் வென்றது.

துவக்கத்தில் ரோகித் சர்மா (216 ரன்), குயின்டன் டி காக் (191), ‘மிடில் ஆர்டரில்’ சூர்யகுமார் (233), இஷான் கிஷான் (186) என பேட்டிங் படை வலுவாக உள்ளது.

தவிர பாண்ட்யா சகோதரர்கள் குர்னால், ஹர்திக் என இருவரும் பேட்டிங், பவுலிங்கில் அசத்துகின்றனர். பின் வரிசையை கவனித்துக் கொள்ள அனுபவ போலார்டு உள்ளார். பவுலிங்கில் பும்ரா, டிரன்ட் பவுல்ட், பட்டின்சன் என மூவர் இணைந்த வேகக்கூட்டணி, மொத்தம் 31 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டுகிறது. சுழலில் ராகுல் சகார் காத்திருக்கிறார்.

நிலையற்ற பேட்டிங்

சுப்மன் கில், ராணா, இயான் மார்கன், தினேஷ் கார்த்திக் என எவ்வித பந்து வீச்சையும் சமாளிக்கும் திறமை கொண்ட வீரர்கள் இருந்தாலும், கோல்கட்டா அணியின் பேட்டிங் நிலையற்றதாக உள்ளது. அதிரடி வீரர் ஆன்ட்ரி ரசல், 7 போட்டியில் 71 ரன் தான் எடுத்துள்ளார்.

இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இளம் வீரர்களான திரிபாதி, டாம் பான்டனுக்கு நெருக்கடி குறையலாம்.

பவுலிங்கில் ரூ. 16.5 கோடிக்கு வாங்கப்பட்ட கம்மின்ஸ், ரன்களை வாரி வழங்குகிறார். தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி மட்டும் ஆறுதல் தருகிறார். சுழல் ‘மாயாவி’ சுனில் நரைன், இன்றும் பங்கேற்க மாட்டார் என்பதால் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெறலாம்.

 

20

கோல்கட்டா, மும்பை அணிகள் இதுவரை 26 போட்டிகளில் மோதின. இதில் மும்பை 20ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. கோல்கட்டா 6ல் தான் வெற்றி பெற்றது.

மூலக்கதை