பஞ்சாப் ‘திரில்’ வெற்றி * ராகுல், கெய்ல் அரைசதம் | அக்டோபர் 15, 2020

தினமலர்  தினமலர்
பஞ்சாப் ‘திரில்’ வெற்றி * ராகுல், கெய்ல் அரைசதம் | அக்டோபர் 15, 2020

சார்ஜா: ஐ.பி.எல்.,தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப். நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூருவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி,பேட்டிங் தேர்வு செய்தார்.

கோஹ்லி ஆறுதல்

பெங்களூரு அணிக்கு பின்ச் (20), தேவ்தத் படிக்கல் (18) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் 6 ஓவரில் 63/2 ரன்கள் குவித்த பெங்களூரு, போகப் போக திணறியது. முன்னதாக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர்(14 பந்தில், 13 ரன்), கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். ஷிவம் துபே 23ரன் எடுத்தார்.

ஷமி வீசிய 18வது ஓவரில் ‘அபாய’ டிவிலியர்ஸ்(2), 48 ரன் எடுத்தகோஹ்லி அவுட்டாகினர். சிறிய மைதானமான சார்ஜாவில்,பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டும் எடுத்தது. மோரிஸ் (25), உதனா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

சூப்பர் ஜோடி

பஞ்சாப் அணிக்கு ராகுல், மயங்க் அகர்வால் (45) ஜோடி மின்னல் வேக துவக்கம் தந்தது. ராகுல் 20வது, கெய்ல் 29வது ஐ.பி.எல்., அரைசதம் அடித்தனர். சகால் வீசிய கடைசி ஓவரில் 2 ரன் தேவைப்பட்டன. கெய்ல் (53) அவுட்டாக, 5 பந்தில் 1 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் பூரன் சிக்சர் அடிக்க பஞ்சாப் அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து, ‘திரில்’ வெற்றி பெற்றது. ராகுல் (61), பூரன் (6) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

200

நேற்று மயங்க் அகர்வாலை போல்டாக்கினார் பெங்களூரு அணியின் சகால். இது ‘டுவென்டி–20’ அரங்கில் சகாலின் 200வது விக்கெட்டாக (180 போட்டி) அமைந்தது.

 

200

கோஹ்லி, கடந்த 2008ல் ஐ.பி.எல்., தொடர் துவக்கத்தில் இருந்து பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். நேற்று இவர் தனது 200வது போட்டியில் களமிறங்கினார்.

 

400

பஞ்சாப் அணியின் பிஷ்னாய் வீசிய பந்தை (14.2வது ஓவர்), பெங்களூருவின் ஷிவம் துபே, சிக்சருக்கு அனுப்பினார். இது இத்தொடரில் அடிக்கப்பட்ட 400வது சிக்சராக அமைந்தது.

 

மூலக்கதை