பதிலடி கொடுக்குமா சென்னை: டில்லி அணியுடன் மீண்டும் மோதல் | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
பதிலடி கொடுக்குமா சென்னை: டில்லி அணியுடன் மீண்டும் மோதல் | அக்டோபர் 16, 2020

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இன்று, சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தும் டில்லி அணியை சந்திக்கிறது. சமீபத்தில் துபாயில் இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டியில் டில்லி அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு இன்று சென்னை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாட்சன் நம்பிக்கை: சென்னை அணி, 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என, 6 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக ஐதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இப்போட்டியில் துவக்க வீரராக அசத்திய சாம் கர்ரான், மீண்டும் கைகொடுக்கலாம். டுபிளசி எழுச்சி காண வேண்டும். ‘டாப்–ஆர்டரில்’ வாட்சன், அம்பதி ராயுடு பலம் சேர்க்கின்றனர். ‘மிடில்–ஆர்டரில்’ கேப்டன் தோனி, டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

ஏழு பவுலர்களுடன் களமிறங்கும் சென்னை அணிக்கு ‘வேகத்தில்’ தீபக் சகார், ஷர்துல் தாகூர், சாம் கர்ரான் ஆறுதல் தருகின்றனர். கடைசி கட்ட ஓவரில் டுவைன் பிராவோ நம்பிக்கை அளிக்கிறார். ‘சுழலில்’ கரண் சர்மா, ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா கூட்டணி பலம் சேர்க்கிறது.

 

ஸ்ரேயாஸ் சந்தேகம்: டில்லி அணி 8 போட்டியில், 6 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக ராஜஸ்தானை வீழ்த்திய தெம்பில் உள்ளது. மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்த ஷிகர் தவான் மீண்டும் சாதிக்கலாம். பிரித்வி ஷா, அஜின்கியா ரகானே எழுச்சி பெற வேண்டும். கடந்த போட்டியில் இடது தோள்பட்டை பகுதியில் காயமடைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி கவலை அளிக்கிறது. ஏற்கனவே ரிஷாப் பன்ட் காயத்தால் ஓய்வில் உள்ளார். ‘மிடில்–ஆர்டரில்’ ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி கைகொடுக்க வேண்டும்.

வேகப்பந்துவீச்சில் ரபாடா (18 விக்.,) பலம் சேர்க்கிறார். ராஜஸ்தானுக்கு எதிராக மணிக்கு 156.2 கி.மீ., வேகத்தில் பந்துவீசிய நார்ட்ஜே மீண்டும் அசத்தலாம். ‘சுழலில்’ அனுபவ அஷ்வின், அக்சர் படேல் கூட்டணி நம்பிக்கை அளிக்கிறது.

 

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, டில்லி அணிகள் 22 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 15, டில்லி 7ல் வென்றன.

 

துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்தும் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது. பெங்களூரு அணி 8 போட்டியில், 5 வெற்றி, 3 தோல்வியை பெற்றது. ராஜஸ்தான் அணி 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வியை பதிவு செய்துள்ளது.

மூலக்கதை