கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி *டிவிலியர்ஸ் சிக்சர் மழை | அக்டோபர் 17, 2020

தினமலர்  தினமலர்
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி *டிவிலியர்ஸ் சிக்சர் மழை | அக்டோபர் 17, 2020

துபாய்: டிவிலியர்ஸ் சிக்சர் மழை கைகொடுக்க, ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐக்கிய அரபு எமிரேட்சில் 13 வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களுரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஸ்மித் அரைசதம்

ராஜஸ்தான் அணிக்கு இம்முறை ஸ்டோக்ஸ் (15), உத்தப்பா ஜோடி துவக்கம் கிடைத்தது. 8வது ஓவரை வீசிய சகால், 4, 5 வது பந்தில் உத்தப்பா (41), சஞ்சு சாம்சனை (9) அவுட்டாக்கினார். அடுத்து வந்த பட்லர் 24 ரன் எடுத்தார். சகால் வீசிய போட்டியின் 18 வது ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரி அடிக்க, 19 ரன்கள் கிடைத்தது. ஸ்மித் அரைசதம் எட்டினார். டிவாட்டியா தன் பங்கிற்கு உதனா ஓவரில்  ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். மோரிசின் கடைசி ஓவரில் ஸ்மித் (57), ஆர்ச்சர் (2) அவுட்டாகினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. டிவாட்டியா (19) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களுரு சார்பில் மோரிஸ் 4 விக்கெட் சாய்த்தார்.

டிவிலியர்ஸ் மிரட்டல்

பெங்களூரு அணிக்கு பின்ச் (14), படிக்கல்  ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பின் கோஹ்லி, படிக்கல் இணைந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் வேகம் குறைந்தது. வேகமாக ரன்கள் சேர்க்க முயன்ற படிக்கல் (35), கோஹ்லி (43) அடுத்தடுத்து அவுட்டாக, பெங்களூரு அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.  கடைசி 12 பந்தில்  35 ரன்கள் தேவைப்பட்டன.

உனத்கட் வீசிய 19வது ஓவரில் டிவிலியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடிக்க, 25 ரன்கள் எடுக்கப்பட்டன. போட்டி பெங்களூரு பக்கம் திரும்பியது. ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 5 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தை டிவிலியர்ஸ் சிக்சருக்கு அனுப்ப, பெங்களூரு அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் (55 ரன், 22 பந்து, 6 சிக்சர், 1 பவுண்டரி ), குர்கீரத் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை