டுபிளசி அரைசதம் விளாசல்: சென்னை அணி ரன் குவிப்பு | அக்டோபர் 17, 2020

தினமலர்  தினமலர்
டுபிளசி அரைசதம் விளாசல்: சென்னை அணி ரன் குவிப்பு | அக்டோபர் 17, 2020

சார்ஜா: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டுபிளசி அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 20 ஓவரில் 179 ரன்கள் குவித்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. சென்னை அணியில் பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார்.  டில்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

டுபிளசி அபாரம்: சென்னை அணிக்கு சாம் கர்ரான், டுபிளசி ஜோடி துவக்கம் தந்தது. துஷார் தேஸ்பாண்டே வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் சாம் கர்ரான் ‘டக்–அவுட்’ ஆனார். இரண்டாவது ஓவரை ரபாடா ‘மெய்டனாக’ வீசினார். அடுத்து வந்த வாட்சன், தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார்.

நார்ட்ஜே வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய டுபிளசி, தேஷ்பாண்டே வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். பொறுப்பாக ஆடிய டுபிளசி, 39 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது நார்ட்ஜே பந்தில் வாட்சன் (36) போல்டானார்.

 

தோனி ஏமாற்றம்: ரபாடா ‘வேகத்தில்’ டுபிளசி (58) வெளியேறினார். கேப்டன் தோனி (3), நார்ட்ஜே பந்தில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு, அஷ்வின், ஸ்டாய்னிஸ், நார்ட்ஜே, ரபாடா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். தேஷ்பாண்டே, ரபாடா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரவிந்திர ஜடேஜா, நார்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் விளாசினார்.

 

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. ராயுடு (45), ஜடேஜா (33) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் நார்ட்ஜே 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

டில்லியின் துஷார் தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரின் 5வது பந்தை ரவிந்திர ஜடேஜா (சென்னை) துாக்கி அடித்தார். மைதானத்தை விட்டு வெளியே சென்ற பந்து சாலையில் விழுந்தது.

மூலக்கதை