சென்னை, சேலம் நாமக்கல் உள்பட 11 அரசு ஆபீஸ்களில் விஜிலன்ஸ் ரெய்டு: கணக்கில் வராத 12 லட்சம் பறிமுதல் தீபாவளி கொள்ளையை தடுக்க நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை, சேலம் நாமக்கல் உள்பட 11 அரசு ஆபீஸ்களில் விஜிலன்ஸ் ரெய்டு: கணக்கில் வராத 12 லட்சம் பறிமுதல் தீபாவளி கொள்ளையை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் உள்பட 11 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 12 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

தீபாவளி நேரத்தில் அதிகாரிகள் அதிக கொள்ளையில் ஈடுபட்டு வருவதால், போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலம் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் பெற்று வருவ தாக லஞ்ச ஒழிப்புத்துறை (விஜிலென்ஸ்) போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

இதையடுத்து சென்னை நீலாங்கரை, பம்மல், குன்றத்தூர், சேலம், திருப்பூர் உள்பட 7 சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை நீலாங்கரையில் பத்திப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக கண்ணன் உள்ளார். இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனை நடத்திய நேரத்தில் புரோக்கர் பிரபு என்பவர் ரூ. 10 லட்சத்துடன் தப்பி ஓடிவிட்டனர். அலுவலகத்தில் ரூ. 2லட்சத்து 32 ஆயிரத்து 935 பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல பம்மலில் பதிவாளராக கண்ணன் உள்ளார். அங்கு ரூ. 12 ஆயிரத்து 380 பறிமுதல் செய்யப்பட்டன.

குன்றத்தூரில் பதிவாளராக தினேஷ் உள்ளார். அவர் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் நேற்று சேர்ந்தார்.

இந்தநிலையில் மாலையில் குன்றத்தூர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டன. அதில் ரூ. 26 ஆயிரத்து 200 ரொக்கம் இருந்தது.

அது பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை தொடங்கி விடிய, விடிய 12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் 2 லட்சத்து 53 ஆயிரம் சிக்கியது. இதுதொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 13 புரோக்கர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே  சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு நேற்று மாலை 5 மணிக்கு  லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 16,115ஐ  கைப்பற்றினர். ஏற்கனவே, அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில், 3 முறை  லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டு 2 சார் பதிவாளர்கள் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டனர்.

நாமக்கல் பரமத்திரோட்டில், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது.

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பிரிவுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு இந்த அலுலலகம் மூலம் அப்ரூவல் அளிக்கப்படுகிறது. உதவி இயக்குனர் ரமணி உள்பட 8 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

பிளாட்டுகளுக்கு அப்ரூவல் அளிக்க ₹10 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை இந்த அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பணம் லஞ்சமாக பெறப்படுவதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதை யடுத்து நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த உதவி இயக்குனர் ரமணி மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். அப்ரூவல் பெறுவதற்காக கையில் கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சிக்கி கொண்ட 8 பேரிடம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 8 மணிக்கு துவங்கி இன்று காலை 6 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் நடைபெற்றது.

இதில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ₹5. 25 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங் களை சோதனையிடவும், தற்காலிக பர்மிட் வழங்கவும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல சற்றுத் தொலைவில் சிப்காட் வளாகத்தின் அருகே தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்க ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயர்வது இந்த சோதனைச் சாவடிகள் வழியாகத்தான். நாள் தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்கிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ். பி.

கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஒரு குழுவினர் இன்று அதிகாலை ஓசூர் செக்போஸ்ட்களுக்கு வந்தனர். இன்கம்மிங் செக்போஸ்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ₹2 லட்சத்து 14 ஆயிரத்து 120 சிக்கியது.

மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகம் உள்ளது.

இங்கு நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை டி. எஸ்பி. கணேஷ் தலைமையில் 10ம் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பல மணி நேர சோதனைக்கு பின்னர் கணக்கில் வராத ரூ. 96 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதில் ரூ. 32 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 75ஆயிரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ. 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தீபாவளி நெருங்குவதால், பத்திரப்பதிவு அலுவலகங்களை கண்காணித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மேலும் பல துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதால் அங்கெல்லாம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை