பூமியின் சுற்றளவு தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்த முதியவர்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி

தினமலர்  தினமலர்
பூமியின் சுற்றளவு தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்த முதியவர்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி

லண்டன்: பஞ்சாபில், பிறந்து, அயர்லாந்தில் வசித்து வரும் முதியவர் ஒருவர், உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சியை மேற்கொண்டார். அவ்வகையில் இதுவரை பூமியின் சுற்றளவுக்கு நடந்து சாதனை படைத்துள்ள அவர், இதனை பதிவு செய்ய வேண்டும் என கின்னஸ் அமைப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.

பஞ்சாபில் பிறந்தவர் வினோத் பஜாஜ். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. சென்னையில் பணியாற்றிய அவர், 1975ம் ஆண்டு ஸ்காட்லாண்டில் குடியேறினார். தற்போது அயர்லாந்தின் லிமெரிக் நகரில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர், ஓய்வு பெற்ற பொறியாளர் மற்றும் வணிக ஆலோசகர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக நடைப்பயிற்சி மேற்கொண்டார்.உடல் எடையை குறைத்ததுடன், பூமியின் சுற்றளவுக்கு நடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக கூறுகிறார்.



ஆக்டிவிட்டி டிராக்கர் செயலி


இது தொடர்பாக அவர் கூறுகையில்;
நடைப்பயிற்சி துவங்கியதும், முதல் மூன்று மாதத்தில் 8 கிலோ எடை குறைந்தது. அடுத்த 6 மாதங்களில் 12 கிலோ எடை குறைத்தேன். நடைப்பயிற்சியின் மூலமே எனது எடையை குறைத்தேன். அதற்காக உணவு கட்டுப்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லை. நடைப்பயிற்சியின் போது, நடையை பதிவு செய்ய பேசர் ஆக்டிவிட்டி டிராக்கர் செயலியை பயன்படுத்தினேன். முதல் ஆண்டு முடிவில் 7,600 கி.மீ., தூரம் நடந்தேன். இது இந்தியாவில் இருந்து அயர்லாந்திற்கு நடந்து செல்லும் தூரம் ஆகும். தொடர்ந்து இரண்டாம் ஆண்டு முடிவில் 15,200 கி.மீ., தூரம் நடந்திருந்தேன்.

இது நிலவின் சுற்றளவை(10,921) விட அதிகம் ஆகும். இது எனக்கு அளித்த உற்சாகம் காரணமாக தொடர்ந்து நடக்க உற்சாகம் அளித்தது. இதன்படி கடந்த செப்.,21 அன்று, 1,496 நாட்களில் பூமியின் சுற்றளவான 40,075 கி.மீ., தூரம் நடந்தேன் . ஆனால் ஒரு முறை கூட நகரை விட்டு வெளியே சென்றதில்லை எனக்கூறினார்.

இதனை பதிவு செய்ய கின்னஸ் சாதனை அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளார். அதனை அந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

மூலக்கதை