காந்தி படத்தை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்..; விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

FILMI STREET  FILMI STREET
காந்தி படத்தை போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிப்பார்கள்..; விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அந்த படத்தில் மக்கள் செல்வன் நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“கலைத்துறை, அரசியல் தலையீட்டு காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது.

இந்திய நாட்டு வருவாயில் சுமார் 93,000 கோடி ரூபாய் பங்களிப்பை ஊடகங்கள் & பொழுபோக்கு துறை வழங்குகிறது.

கொரோனா சூழலில் அனைத்து தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல.

நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவப் போவதில்லை.

காந்தி படத்தை மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை.

ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்குப் பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும்.

அதை அரசியல் ரீதியாக மட்டும் அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது.

எல்லைகளைக் கடந்து கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும். இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொதுதே படத்தை பற்றி கருத்துகள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்கவேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sarathkumar extends support to Vijay Sethupathi on ‘800’ controversy

மூலக்கதை