சுஷாந்த் சிங் மரணம் : வதந்தி பரப்பியவர் கைது

தினமலர்  தினமலர்
சுஷாந்த் சிங் மரணம் : வதந்தி பரப்பியவர் கைது

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த மரணம் கொலையா, தற்கொலையா என்கிற சர்ச்சை எழுந்தது. மும்பை போலீசார், அவர்களை தொடர்ந்து சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த மரணம் தற்கொலை தான் என்கிற முடிவையும் சமீபத்தில் சிபிஐ தரப்பில் இருந்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் மட்டுமல்ல, அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன அவரது முன்னாள் மேனேஜர் திஷாவின் மரணமும் கொலைதான் என்கிற ரீதியில் சோசியல் மீடியாவில் ஒருவர் தொடர்ந்து கதைகளை உருவாக்கி பரப்பி வந்தார். குறிப்பாக திஷா இறந்துபோவதற்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என புதிய கதைகளை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல், பாலிவுட்டில் உள்ள ஒருசில பிரபலங்களை மட்டும் இந்த மரணங்களுடன் தொடர்புபடுத்தி அவர் பதிவுகளை வெளியிட்டது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை மும்பை போலீசார் கைது செய்தனர். சோஷியல் மீடியாவின் விதிமுறைகளை மீறி செய்தி பரப்பியதற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அந்த நபர்.

மூலக்கதை