திருப்பி அனுப்பப்பட்ட சீன சரக்கு கப்பல்; சீனாவின் அடிமைத்தனத்தை விமர்சிக்கும் அமெரிக்கா

தினமலர்  தினமலர்
திருப்பி அனுப்பப்பட்ட சீன சரக்கு கப்பல்; சீனாவின் அடிமைத்தனத்தை விமர்சிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமிய பழங்குடி இன மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது என முன்னதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது.
இதனை சீனா மறுத்து வந்தது. சீனாவின் மக்கள் தொகையை குறைக்க அங்கு வாழும் சிறுபான்மையினரான இந்த பழங்குடியினரது பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு கருத்தடை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அதனை மறுத்த சீனா, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து தொழில்களை கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் நன்றாக வைத்திருப்பதாக கூறியது.

இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் இதுகுறித்து ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இது இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில் செயற்கை முடி தயாரிப்பு மிகவும் பிரபலம். பெண்கள் அணிந்து கொள்ளும் இந்த செயற்கை விக், அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றைத் தயாரிக்க இஸ்லாமிய பழங்குடியின பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த பெண்களை சீன அரசு தொழிலாளர் சட்டத்தை மீறி அதிக நேரம் வேலை வாங்கி குறைந்த சம்பளம் அளிப்பதாக முன்னதாக அமெரிக்கா குற்றச்சாட்டு இருந்தது.

இதுகுறித்து ராபர்ட் தற்போது பேசியுள்ளார். ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து கப்பலில் ஏற்றுமதியாகும் செயற்கை விக் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். இதுபோன்ற அடிமைத் தனங்களை அமெரிக்கா என்றும் ஆதரிக்காது எனக் கூறும் வகையில் அமெரிக்கா இந்த செயலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாக அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை