ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 664 மார்க் எடுத்து சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 664 மார்க் எடுத்து சாதனை

பெரியகுளம்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ பட்டப்படிப்புகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியானது.

இதில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் இந்திய அளவில் உள்ள அரசுப் பள்ளிகளில் 720க்கு 664 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும், அகில இந்திய அளவில் 1823ம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

இவரது தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி.

கடந்த 2018-2019 கல்வி ஆண்டில் சில்வார்பட்டி அரசு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற ஜீவித்குமார், அந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 193 மதிப்பெண் மட்டுமே பெற்றார். மாணவரின் மருத்துவராகும் லட்சியத்தை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்தனர்.

அங்கு கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்ற ஜீவித்குமார் நடந்து முடிந்த நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

நாமக்கல் மாணவர்: நாமக்கல் கிரீன்பார்க் நீட் கோச்சிங் சென்டரில் படித்து, தேர்வு எழுதிய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் பெற்று,  மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அளவில் மாணவர் ஸ்ரீஜன் 8வது இடத்தையும், ஓ. பி. சி பிரிவில் இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.

.

மூலக்கதை