ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த மாசி மாத பூஜைகளுக்கு பின்னர் பிப்ரவரி 18ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

கடைசியாக அன்றுதான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பின்னர் ஐப்பசி மாத பூஜைகளின்போது பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறப்பார்.

இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளைமுதல் 5 நாட்களுக்கு ஐப்பசி மாத பூஜைகள் நடைபெறும்.

மேலும் நாளை முதல் வரும் 21ம் தேதிவரை தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

நாளை காலை உஷபூஜைக்கு பின்னர் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஏற்கனவே நேர்முக தேர்வு மூலம் சந்நிதானத்துக்கு 9 பேரும், மாளிகைப்புரத்துக்கு 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 பேர் இரண்டு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் தலா ஒருவர் புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் மண்டல கால பூஜைகள் தொடங்கும் கார்த்திகை 1ம் தேதி புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்பர்.

அடுத்த ஓராண்டுக்கு இவர்கள் தலைமையில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களில் முக்கிய பூஜைகள் நடைபெறும். முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளின்போது தினமும் 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்-லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இதற்காக கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் உடல்தகுதி மருத்துவ சான்றிதழும் இருக்க வேண்டும்.

தரிசனத்துக்கு வருபவர்களில் சிலர் கொரோனா பாதித்து மீண்டவர்களும் இருக்கலாம். இவர்களுக்கு மலை ஏறும்போது உடல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இதுபோல கொரோனா காரணமாக பலர் எந்த உடல்பயிற்சியும் செய்யாமல் வீட்டுக்குள் இருந்திருக்கலாம். இவர்களுக்கும் மலையேறும்போது பிரச்னைகள் ஏற்படலாம்.

எனவே சபரிமலை வருபவர்கள் மருத்துவரிடம், மலையேற உடல் தகுதி உள்ளதா என்ற பரிசோதனை சான்றிதழையும் கொண்டு வரவேண்டும். மலையேறும்போது முகக்கவசம் அணிய வேண்டாம்.

ஆனால் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடாது. கொரோனா நிபந்தனைகளுக்கு உட்பட்டே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

சன்னிதானத்தில் மிக நெருக்கமாக நிற்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

.

மூலக்கதை