175 நாட்களுக்கு பிறகு இன்று முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடங்கியது: பயணிகள் குறைவால் 500 பேருந்துகள் மட்டுமே ஓடின

தமிழ் முரசு  தமிழ் முரசு
175 நாட்களுக்கு பிறகு இன்று முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடங்கியது: பயணிகள் குறைவால் 500 பேருந்துகள் மட்டுமே ஓடின

சென்னை: தமிழகத்தில் 175 நாட்களுக்கு பிறகு ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடங்கியது. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அப்போது பொது போக்குவரத்துக்கு தடை விதிக் கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் மண்டலங்களுக்குள் மட்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலம் தவிர மற்ற மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அப்போது கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் மாவட்டங்களுக்குள்ளான போக்குவரத்து சேவை கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கியது. அதன்படி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்கள் இயங்க துவங்கின.


ஆனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கவில்லை. மேலும் அதன் உரிமையாளர்கள், தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 2 காலாண்டு (ஆறு மாதம்) சாலை வரியை பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க பிற மாநிலங்களைப் போல்  தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும்.

குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆம்னி பஸ்கள் இயங்காது என அதன் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

அதன்படி அப்பஸ்கள் இயங்கவில்லை. ஒருவழியாக அரசு சாலைவரியை ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று முதல் ஆம்னி பஸ் சேவை தொடங்கியது.


முன்னதாக இதையொட்டி பேருந்துகள் அனைத்தும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. பிறகு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பஸ்ஸ்டாண்டிற்கு கொண்டுவரப்பட்டது.

175 நாட்களுக்கு பிறகு ஆம்னி பஸ் சேவை தொடங்கியிருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 500 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஓட்டுனர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

பயணிகளும் முகக்கவசம் அணிந்து பயணித்தனர். பஸ்சுக்குள் சானிடைசர் உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: கடந்த 175 நாட்களாக ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், அதைச்சார்ந்த  2 லட்சம் பேரும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தோம்.

இந்நிலையில் தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு பேருந்துகளை இயக்காத காலகட்டமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6  மாதத்திற்கு சாலை வரி விலக்கு பெற்றுள்ளோம்.

அதன்படி இன்றிலிருந்து தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்க தொடங்கியது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 4,000 பஸ்கள் உள்ளன. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தினால் இன்று 500 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்படி கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை