லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என ஐகோர்ட் காட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் விஜிலன்ஸ் ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என ஐகோர்ட் காட்டம் நெல் கொள்முதல் நிலையத்தில் விஜிலன்ஸ் ரெய்டு

* கணக்கில் வராத ₹87,890 பறிமுதல்
* டெல்டாவில் உள்ள 700 இடங்களில் சோதனை நடத்த விவசாயிகள் வலியுறுத்தல்

மன்னார்குடி: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் தற்போது 95 சதவீதம் அறுவடை பணி முடிந்து, சம்பா தாளடி சாகுபடி பணி தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கொள்முதல் நிலையங்களை திறந்து தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

ஆனால், நெல் மூட்டைகள் ஈரமாக இருப்பதாகவும், போதிய சாக்கு இல்லாததை காரணம் காட்டி தினமும் 600, 700 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்தும், கொட்டி காயவைத்தும் விவசாயிகள் நாள் கணக்கில் காத்துகிடக்கின்றனர்.

நாகையில் 152, தஞ்சையில் 252, திருவாரூரில் 234, புதுகை மற்றும் திருச்சியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.


இந்த கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹35 முதல் 40 வரை கமிஷன் வசூலிக்கப்படுகிறது. வெளி மாவட்டத்தினரிடம் ₹50 வரை வசூலிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு சுமார் ஒரு கொள் முதல் நிலையத்தில் சுமார் 600ல் இருந்து 700 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ₹40ல் இருந்து ₹50 வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

டெல்டாவில் சுமார் 700க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 5 லட்சம் மூட்டை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு பார்த்தால், ஒரு மூட்டைக்கு ₹40 லஞ்சமாக வசூலித்தாலே ஒரு நாளைக்கு சுமார் ₹20 லட்சம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த சூரிய பிரகாசம், ஐகோர்ட் மதுரை கிளையில் இது குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர், ‘‘விவசாயிகள்  விளைபொருளை விற்க முடியாமல் தவிக்கும் நிலையில், இதற்காக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனைக்குரியது.

அரசு அதிகாரிகள் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ. 40 லஞ்சமாக தராத விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்வதில்லையாம். அரசு அதிகாரிகள் சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் தொடர்பாக அரசு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். எனவே, தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன? நெல் மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், மன்னார்குடி அருகே கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி, கணக்கில் வராத ₹87,890ஐ பறிமுதல் செய்துள்ளனர். அதன் விவரம்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்ணாரப்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு அசேசம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (35) பட்டியல் எழுத்தராக உள்ளார். இங்கு விவசாயிகள் சுமார் 7,000 நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக இந்த மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகளிடம் மூட்டைக்கு ₹40ம் வெளி மாவட்டத்தினரிடம் கூடுதலாகவும் கமிஷன் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி விவசாயிகள் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி நந்தகோபால், இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வி மற்றும் போலீசார் நேற்று இரவு 10 மணியளவில் கண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

அவர்கள் இன்று அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் ₹87,890 பறிமுதல் செய்யப்பட்டது.



ஒரு கொள் முதல் நிலையத்திலேயே சுமார் ₹1 லட்சம் கணக்கில் வராத லஞ்ச பணம் சிக்கி உள்ளது. திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

இந்த கொள்முதல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினால், லட்சக்கணக்கில் லஞ்ச பணம் சிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

போலி சிட்டா அடங்கல்
நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயி சிட்டா அடங்கல் கொண்டு வர வேண்டும்.

ஆனால் வெளி மாவட்டத்தினர் போலி சிட்டா அடங்கல் தயாரித்து கொண்டு வந்து கொடுத்து கொள்முதல் செய்வதாகவும், லஞ்சம் வாங்கிக்கொண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் சிட்டா அடங்கல் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை