தங்கராணி சொப்னா கூட்டாளி ரமீசுக்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கராணி சொப்னா கூட்டாளி ரமீசுக்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் இதுவரை தங்கராணி சொப்னா உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 10 பேர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது என்ஐஏ சார்பில் ஆஜரான வக்கீல் அர்ஜூன் கூறியது:

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவரான ரமீசுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது ஏற்கனவே தெரியவந்து இருக்கிறது.

தற்போது இவருக்கு சர்வதேச கடத்தல் கும்பல் தலைவரான தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தாவூத் இப்ராகிமின் டி கம்பெனி தான்சானியாவை மையமாக வைத்து தங்கம், போதை பொருள், ஆயுதம், ரத்தினம் போன்றவற்றை கடத்துவது உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமீஸ் அடிக்கடி தான்சானியா சென்று வந்தது தெரியவந்தது.

தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதால் தான் அவர் அடிக்கடி தான்சானியா சென்று வந்துள்ளார். தான்சானியாவில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் துப்பாக்கியுடன் இருக்கும் ரமீசின் போட்டோ கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு ரத்தினங்களை கடத்துவதற்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன் டீலர்ஷிப் பெறுவதற்காக முயற்சித்துள்ளார். ஆனால் அது பலனளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் சொப்னாவின் செல்போனில் மலேசியாவில் இருக்கும் சர்ச்சை பேச்சாளர் ஜாகீர்நாயக்கின் போட்டோக்களும், கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களிடம் இருந்து தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களின் போட்டோக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரமீஸ் கொச்சி வழியாகவும் பலமுறை தங்கத்தை கடத்தி உள்ளார்.

தங்கத்தை கடத்தும்போது அதனுடன் துப்பாக்கிகளையும் கடத்தி வந்துள்ளார். கடந்த வருடம் நவம்பரில் 19 துப்பாக்கிகளை கேரளாவுக்கு கொண்டு வந்துள்ளார்.

தங்கம் கடத்தல் மூலம் கிடைக்கும் லாப பணத்தை இக்கும்பல் சொந்த தேவைக்கு பயன்படுத்துவது கிடையாது. அந்த பணத்தை மீண்டும் தங்கம் கடத்துவதற்கே முதலீடு செய்துள்ளனர்.

தங்கம் கடத்தலில் கைது செய்யப்பட்ட சொப்னா உள்பட 40க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட 99 உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் மிக தீவிரமாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சொப்னா ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரும் முன்ஜாமீன் கோரி நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

.

மூலக்கதை