சபரிமலையில் நாளை நடை திறப்பு தினசரி 250 பக்தர்களுக்கு அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் நாளை நடை திறப்பு தினசரி 250 பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் மண்டல கால பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பதற்கு முன்னோடியாக ஐப்பசி மாத பூஜைகளின்போது தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு அரசும் அனுமதி அளித்துள்ளது.

பக்தர்கள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. 2 நாளில் 5 நாட்களுக்கான அனுமதியும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார்.

நாளை வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கும்.

7 மாதங்களுக்கு பின்னர் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி இல்லை.

ஷவர்கள் மூலம் குளிப்பதற்கு பம்பையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

17ம் தேதி சன்னிதானத்தில் வைத்து சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

.

மூலக்கதை