தெலங்கானாவை புரட்டிப் போட்டது: கனமழைக்கு 35 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானாவை புரட்டிப் போட்டது: கனமழைக்கு 35 பேர் பலி

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது.   இதுவரை மழைக்கு 35க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஐதராபாத்தில் மட்டும் 23 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் நகரின் முக்கிய தெருக்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை நீடிக்கிறது.

தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத், இந்த மழையால் வெகுவாக பாதிக்க்பட்டுள்ளது.

பழைய ஐதராபாத் நகரின் முக்கிய வீதிகள் அனைத்திலும் இடுப்பளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மிதவை படகுகளில் மீட்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏராளமானோர் உணவு, தண்ணீரின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மழைக்கு வீடு இடிந்து 11 பேர் பலியான நிலையில்,  ஐதராபாத்தில் மட்டும் இதுவரை மழைக்கு 23 பேர் பலியாகி உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலம் இதுவரை 35க்கும் அதிகமானோர் மழைக்கு பலியாகி உள்ளனர் என்று தெலங்கானா அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிகிறது.

நேற்று மாலை வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டும் பலத்த மழையால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஐதராபாத் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பெங்களூரு மற்றும் விஜயவாடாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதால், ஐதராபாத்துக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன என்பதால், இன்றும் மின்சப்ளை சீராகாது என்று மின்வாரியத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தில் மட்டும் 1500க்கும்மேற்பட்ட ஐ. டி. சாஃப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன.

இவற்றில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது 95 சதவீதம் ஐ. டி.

பணியாளர்கள், கடந்த மார்ச் மாதம் முதல் வீடுகளில் இருந்தே வேலை செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக, நகரில் மின்சப்ளை இல்லாததால் ஐ. டி.

பணியாளர்கள் அனைவரும் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ. டி நிறுவனங்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ஐதராபாத்தில் 34 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

இது வழக்கமாக மழைக்காலங்களில் ஒரு மாதத்திற்கு பலியாகும் மழையளவு என மாநில வளர்ச்சி திட்ட குழுமம் தெரிவித்துள்ளது. ‘முற்றிலும் எதிர்பாராத மழை.

அக்டோபரில் ஐதராபாத்தில் இந்த அளவு மழை பதிவானதேயில்லை’ என்று வானிலை மைய இயக்குநனர் நாகரத்னா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவிலும் பலத்த மழை

ஆந்திர மாநிலத்திலும் நேற்று முன்தினம் முதல் மழை வெளுத்து கட்டுகிறது. கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் கடந்த 18 மணி நேரங்களுக்கும் மேலாக கனமழை நீடிக்கிறது.

விசாகபட்டினம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களை சேர்ந்த 98 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கும் மீட்பு பணிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கர்நாடகாவில் திங்கள் முதலே மழை நீடிக்கிறது.

கலபுரகி, யாத்கிர் மற்றும் பிதார் மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் விவசாய நிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடாக் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். தெலங்கானாவில் பெய்து வரும் மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை நீடிக்கும் என்பதால் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை