அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி தமிழகம் முழுவதும் 27 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி தமிழகம் முழுவதும் 27 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி தமிழகம் முழுவதும் 27 இடங்களில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ,  அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாக  கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக போராட்டம் நடத்த்தப்படும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி. வி. எம். பி. எழிலரசன் எம். எல். ஏ.

ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் 27 இடங்களில் கல்லூரிகள் முன்பாக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி. வி. எம். பி. எழிலரசன் எம். எல். ஏ.

ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மாதவரம் சுதர்சனம்,  எம்எல்ஏக்கள் ஆர். டி. சேகர், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மாவட்ட மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஏ. எம். வி. பிரபாகர்ராஜா, ராஜா அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்று ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் கொடுத்து வருகிறது. இதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு இவர்கள் யார்?.

இப்போது என்ஜினியரிங் படிக்க 4 ஆண்டுகளுக்கு வெறும் ரூ. 4 லட்சம் தான் செலவு ஆகிறது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்தது என்றால், வருடத்திற்கு மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் செலவு ஆகும்.

இது முதல் கட்ட போராட்டம் தான்.

இது தொடர் போராட்டமாக தொடரும். சிறப்பு அந்தஸ்து திட்டத்தை கைவிடவில்லை என்றா அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் போராட்டம், நாளை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நடக்கும்.

மாநில அரசு முதுகெலும்பு இல்லாமல், பிரதமர் மோடி எதை சொன்னாலும் செய்கிற கூஜா தூக்கும் அரசாக இருந்து வருகிறது. இந்த அரசு போய் விட்டது என்றால் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் மீட்கப்படும்.

இன்னும் 6 மாதம் காலம் தான் இருக்கிறது. திமுகவை ஆட்சியில் அமர வைக்க ஒட்டுமொத்த மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

தலைவர் மு. க. ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடன் விட்டுக்கொடுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் மீட்டெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை