வேலூர் முதன்மை பொறியாளர் வீட்டில் 19 மணிநேரம் நடந்த விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.3.25 கோடி பணம், 450 சவரன் பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் முதன்மை பொறியாளர் வீட்டில் 19 மணிநேரம் நடந்த விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.3.25 கோடி பணம், 450 சவரன் பறிமுதல்

வேலூர்: வேலூர் மண்டல சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளருக்கு சொந்தமான ராணிப்பேட்டை வீட்டில் 19 மணிநேரம் ரெய்டு நடந்தது. இதில் ரூ. 3. 25 கோடி பணம், 3. 6 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, நில ஆவண பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதனிடையே வங்கி லாக்கர்களில் சோதனை நடத்த விஜிலென்ஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே. பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(51).

இவர் வேலூர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக உள்ளார். இவரது அலுவலகம் வேலூர் காந்தி நகரில் உள்ளது.

இதற்காக வேலூர் விருதம்பட்டில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வருகிறார்.

இவரது கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, வாணியம்பாடி, விழுப்புரம், ஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் வருகின்றன. இப்பகுதிகளில் புதிதாக கம்பெனி, பள்ளி, தியேட்டர், வணிக வளாகம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்குவது, உரிமம் புதுப்பித்தல், பெயர் மாற்றம், தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகள் இவரது அதிகார வரம்புக்குள் வருகிறது.

இதற்காக வருபவர்களிடம் இவர் முறைகேடாக வருவாய் ஈட்டி வந்ததாக வந்த தகவலின்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு பன்னீர்செல்வம் விருதம்பட்டில் தங்கியிருந்த வீடு மற்றும் காரில் இருந்து 33. 73 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்தனர். விசாரணையில், லஞ்சப் பணத்தை பதுக்கி வைக்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும் தனியாக தொடர்ந்து, ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான வீட்டில் விஜிலென்ஸ் டிஎஸ்பி ஹேமச்சித்திரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி மற்றும் 10 பேர் அடங்கிய போலீசார் நேற்று காலை 11 மணி தொடங்கி இன்று காலை 6. 30 மணி வரை சுமார் 19 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இதில் ரூ. 3. 25 கோடி ரொக்கம், தங்க காசுகள், ஆபரணங்கள் என 450 சவரன்,6. 5 கிலோ வெள்ளி பொருட்கள், 90க்கும் மேற்பட்ட பல கோடி மதிப்பிலான நில ஆவண பத்திரங்கள், வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையை தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் வங்கி லாக்கர்களில் இன்று சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஒரு மாவட்ட அதிகாரியிடம் இருந்து மட்டுமே இவ்வளவு பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும், சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டில் நடந்த ரெய்டு அறியாத பன்னீர்செல்வம்

நேற்று முன்தினம் விஜிலென்ஸ் போலீசார், தன்னிடம் பறிமுதல் செய்த பணத்துடன் விவகாரம் முடிந்துவிடும், வழக்கை சந்தித்துக்கொள்ளலாம் என சர்வசாதாரணமாக நினைத்து விருதம்பட்டிலேயே இருந்துள்ளார்.

ஆனால் காலையில் சிப்காட்டில் உள்ள தனது சொகுசு வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடப்பது குறித்து போலீசார் தெரிவித்தபின்னர்தான் பன்னீர்செல்வத்துக்கு தெரிந்ததாம். அதை விட அவரது மனைவியிடம் விஜிலென்ஸ் போலீசார் பணம், நகைகள் குறித்து கேட்டதற்கு, ‘அவர் எங்களிடம் எதுவும் சொல்வதில்லை.

அவரே வருவார், பணத்தை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று வைப்பார். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றார்களாம்.

பன்னீர்செல்வத்தின் குடும்ப விவரம்

பன்னீர்செல்வத்துக்கு மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துள்ளது. ஒரு மகள் அமெரிக்காவில் கணவருடன் செட்டிலாகியுள்ளார்.

மற்றொரு மகள் சென்னையில் அரசு அதிகாரியாக உள்ளார். மகன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான அத்திமாஞ்சேரியில் உள்ள வீட்டில் அவரது தாய் மட்டும் வசித்து வருகிறார்.

.

மூலக்கதை